சென்னை:டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 பேர் இப்போட்டிகளுக்குத் தேர்வாகி உள்ளனர்.இதில் 400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தில் தேர்வான நாகநாதன் பாண்டி என்பவர் சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வருபவர் ஆவார்.
சிங்கபுலியாபட்டி சிங்கம்
இவர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள சிங்கபுலியாபட்டி பகுதியைச் சேர்ந்தவர். இவரது தந்தை பாண்டி, தாய் பஞ்சவர்ணம் ஆவார்.
கடந்த ஜூலை மாதம் 2018ஆம் ஆண்டு சென்னை காவல்துறையில் இரண்டாம் நிலை காவலராகப் பணியில் சேர்ந்துள்ளார்.
காவலும், தடகளமும்
பணியில் சேர்ந்தாலும் தொடர்ந்து தடகள போட்டிகளில் உள்ள ஆர்வம் காரணமாக, நாகநாதனுக்கு சென்னை காவல்துறை உயர் அலுவலர்கள், விளையாட்டில் சாதிப்பதற்கு பல்வேறு வகையில் உறுதுணையாக இருந்துள்ளனர்.
இவர் காவல்துறையில் பணிபுரிந்துகொண்டே பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் தடகளப் போட்டிகளில் பங்கு பெறுவதற்கு அவருக்கு உத்வேகமும் அளித்துள்ளனர்.
'ஸ்போர்ட்ஸ் கிட்' பெறும் சிங்கபுலியாபட்டி சிங்கம் ஆணையரின் அன்பளிப்பு
கடந்த மார்ச் மாதம் பஞ்சாப் மாநிலம், பாட்டியாலாவில் நடைபெற்ற ஒலிம்பிக் தகுதிப் போட்டியில், 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளார்.
இந்த பயிற்சி முகாமில் பங்கேற்பதற்காக, பஞ்சாப் செல்ல இருந்த நாகநாதனை பாராட்டி, அப்போதைய காவல்துறை ஆணையராக இருந்த மகேஷ்குமார் அகர்வால், 'ஸ்போர்ட்ஸ் கிட்' வழங்கி வாழ்த்தி அனுப்பினார்.
இந்நிலையில், தற்போது டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நாகநாதன் தேர்வானதற்கு, சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் உட்பட பல்வேறு காவல்துறை உயர் அலுவலர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
நாகநாதன் பாண்டி, இந்தியவிற்காக ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று சிங்கபுலியாபட்டி கிராமத்திற்கு பெருமை சேர்ப்பார் என கிராம மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இதையும் படிங்க: ஒலிம்பிக் - தேசியக்கொடி ஏந்திச்செல்லும் மேரி கோம், மன்பிரீத் சிங்