கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒலிம்பிக், ஐபிஎல், விம்பிள்டன், ஃபார்முலா ஒன் உள்ளிட்ட பல்வேறு விதமான விளையாட்டுத் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தற்போது பன்டேஸ்லிகா, லாலிகா உள்ளிட்ட கால்பந்துத் தொடர்கள் மட்டும் பார்வையாளர்களின்றி நடத்துவதற்கு அந்நாட்டு அரசுகள் ஒப்புதல் வழங்கியுள்ளன.
இந்நிலையில், உலகின் மிகவும் பிரபலமான தடகள விளையாட்டுத் தொடரான 'பாஸ்டன் மாரத்தான் தொடர்' இந்தாண்டும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கரோனா வைரஸின் தாக்கம் அமெரிக்க நாடுகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இந்தாண்டிற்கான பாஸ்டன் மாரத்தான் போட்டிகள் ஒத்திவைக்கப்படுமா என்ற சந்தேகம் ரசிகர்களின் மத்தியில் எழுந்திருந்தது.
இந்நிலையில் பாஸ்டன் தடகள கூட்டமைப்பு, 2020ஆம் ஆண்டிற்கான பாஸ்டன் மாரத்தான் போட்டிகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்தப் பதிவில், 'கரோனா வைரஸ் காரணமாக 2020ஆம் ஆண்டிற்கான பாஸ்டன் மாரத்தான் தொடர் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் இத்தொடரில் பங்கேற்க முன்பதிவு செய்திருந்த வீரர்கள், தாங்கள் செலுத்திய பணத்தை கட்டணப்பிடிப்பின்றி ஒப்படைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது' என்று அறிவித்துள்ளது.