சீனா (ஹாங்சோவ்): 19வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணி வீரர்கள் பதக்கங்களை வென்று வருகின்றனர். அதன் படி, இன்று (செப்.30) நடைபெற்ற இந்திய ஸ்குவாஷ் ஆடவர் பிரிவில் (சுவர்பந்து போட்டி) பாகிஸ்தானை தோற்கடித்து தங்கப் பதக்கத்தை வென்றுள்ளனர்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற 3 போட்டிகளில் பாகிஸ்தானை 2-1 என்ற கணக்கில் தோற்கடித்து இந்தியா தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான முதல் போட்டியில் பாகிஸ்தான் வீரர் இக்பால் விறுவிறுப்பான தனது ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பின்னர் இந்திய அணியின் வீரர் மகேஷ் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், ஆரம்பத்தில் 5-1 என்ற புள்ளிகளுடன் முன்னிலையில் இருந்த பாகிஸ்தான் அணியின் இக்பால், பின்னர் 8-11, 11-3, 11-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
இதையும் படிங்க:Asian games 2023 : துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு பதக்கம்! வெள்ளி வென்ற இந்திய ஜோடி!
இரண்டாவது ஆட்டத்தில் இந்தியாவின் சவுரவ் கோஷல் வெற்றி பெற்றார். இதனால், ஆட்டம் 1-1 என்று சமநிலை அடைந்தது. தொடர்ந்து வெற்றியை தீர்மானிக்கும் 3வது ஆட்டத்தில் இந்தியாவின் அபய் சிங், பாகிஸ்தான் வீரர் நூர் ஜமான் உடன் விளையாடினார். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் அபய் சிங் போராடி வெற்றிப்பெற்றார்.
இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான ஆட்டத்தின் முடிவில் 2-1 என்ற விகிதத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அணி அபார வெற்றிப்பெற்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.
19வது ஆசிய போட்டிகளில் தொடர்ச்சியாக, இந்திய வீரர்கள் பல்வேறு போட்டிகளில் சிறப்பாக விளையாடி பல்வேறு பதக்கங்களை வென்று வருகின்றனர். சீனாவில் நடைபெறும் இப்போட்டிகளில் முதலில் இருந்தே பதக்கப்பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:Asian Games 2023 : ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு தங்கம்! டென்னிஸ் கலப்பு இரட்டையரில் இந்திய அணி அபாரம்!