சென்னை: ஆடவர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் 7-வது எடிசன் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் இன்று (ஆகஸ்ட் 03) தொடங்குகிறது. இந்த போட்டியானது வரும் 12ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதில் இந்தியா (உலக தரவரிசை 4), தென்கொரியா (9), மலேசியா (10), பாகிஸ்தான் (16), ஜப்பன் (19), சீனா (25) என 6 அணிகள் கலந்து கொள்கின்றன. போட்டியில் அனைத்து அணிகளும் ஒரே குருப்பில் இருக்க, ரவுண்ட் ராபின் ஆட்டங்களின் முடிவில், முதல் 4 இடங்களில் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தேர்வாகும்.
இந்திய அணியைப் பொருத்தவரை ஸ்பெயினில் நடைபெற்ற சர்வதேச ஹாக்கி தொடரில் சிறப்பாக ஆடி, அதே உத்வேகத்துடன் இதில் களம் காண்கிறது. மேலும், செப்டம்பர் மாதம் தொடங்க உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் வைத்து நடைபெற உள்ளது. இது 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெரும் சுற்றாக அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இன்னும் 50 நாட்களே இருக்கும் பட்சத்தில், இந்த ஆசிய சாம்பியன்ஸ் போட்டியானது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.