கத்தார் தலைநகர் தோஹாவில் 14ஆவது ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரில் இந்தியாவைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பல்வேறு பிரிவுகளிலும் கலந்து கொண்டு பதக்கங்களையும் வென்றுவருகின்றனர். மேலும் இந்தப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றனர்.
அந்த வகையில் கடந்த வாரம் நடைபெற்ற போட்டியில்50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திர துப்பாக்கி சுடுதல் வீராங்கனை தேஜஸ்வினி, இந்தியா சார்பில் ஒலிம்பிக் போட்டிக்கு 12ஆவது நபராக தகுதி பெற்றார். நேற்று நடைபெற்ற ஆடவர் 50 மீட்டர் ரைபில் பிரிவில் வெண்கலம் வென்ற இளம் வீரர் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 13ஆவது ஆளாக ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்றார். இதே போன்று ஆடவர் ஸ்கீட் பிரிவில் தங்கம் வென்ற அங்கத் வீர் சிங் பாஜ்வா, வெள்ளி வென்ற மைராஜ் அகமது கான் ஆகியோர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றனர்.