மும்பை: அதானி குழுமத் தலைவரும், தொழிலதிபருமான கெளதம் அதானி, வளர்ந்து வரும் இந்திய செஸ் இளம் வீரரான பிரக்ஞானந்தாவை இன்று (ஜன.05) சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை கெளம் அதானி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, "செஸ் உலகில் பல பதக்கங்களை வென்று இந்தியாவை பெருமைப்படுத்தும் பிரக்ஞானந்தாவுக்கு ஆதரவளிப்பது ஒரு பாக்கியம்.
பிரக்ஞானந்தாவின் வெற்றி எண்ணற்ற இளம் இந்தியர்களுக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கிறது மற்றும் நமது தேசத்தை பிரநிதித்துவப்படுத்தும் மேடையில் நிற்பதை விட, மகிழ்ச்சி தரக்கூடியது எதுவுமில்லை. பிரக்ஞானந்தா என்பது இந்தியாவால் என்ன செய்ய முடியும் மற்றும் என்னவாக இருக்க முடியும் என்பதை குறிக்கிறது. அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஜெய்ஹிந்த்" என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜூலை - ஆகஸ்ட் மாதங்கள் அஜர்பைஜானின் பாகு நகரில் நடைபெற்ற செஸ் உலகக் கோப்பை 2023 போட்டியின் இறுதிப் போட்டியில், நார்வே வீரரான மாக்னஸ் கார்ல்சனிடம் பிரக்ஞானந்தா தோல்வியடைந்ததன் மூலம் 2வது இடத்தைப் பிடித்தார். அதேபோல், கடந்த ஆண்டு சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பிரக்ஞானந்தா வெள்ளிப் பதக்கம் வென்றார்.
18 வயதான இவர், ஃபிடே செஸ் தரவரிசை ஜனவரி 2024-இன் ஜூனியர் பிரிவில் 2,743 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். இவருடன் வின்செண்ட் கீமரும், அதே புள்ளியுடன் முதல் இடத்தில் உள்ளார். மேலும், இந்திய கிராண்ட் மாஸ்டர்களான பிரக்ஞானந்தா, டி குகேஷ், விதித் சந்தோஷ் குஜராத்தி ஆகியோர் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஃபிடே செஸ் கேண்டிடேட்ஸ் போட்டியில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:டி20 போட்டியில் ரோகித், கோலி? - அணியில் நிகழப்போகும் மாற்றம் என்ன?