இந்த ஆண்டுக்கான ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடர் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்றுவருகிறது. இந்திய வில்வித்தை சம்மேளனம் இடைநீக்கம் செய்யப்பட்டதால் இந்திய வீரர்கள் உலக வில்வித்தை அணியில் இடம்பெற்று விளையாடிவருகின்றனர்.
ஆடவர் அணி ரிகர்வ் போட்டி:
இதில், ஆடவர் அணிகளுக்கான ரிகர்வ் பிரிவு போட்டியில் சீனா - உலக வில்வித்தை அணிகள் மோதின. இதில் அடானு தாஸ், தருண்தீப் ராய், ஜெயந்தா தலுக்தார் ஆகிய மூவர் அடங்கிய அணி 6-2 என்ற கணக்கில் சீனாவின் ஸென்குயி ஷி, சவுசான் வெய், ஹாவ் ஃபென்ங் ( Zhenqi Shi, Shaouxan Wei, Hao Feng) அணியை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை பெற்றது.
மகளிர் அணி ரிகர்வ் போட்டி:
இதேபோல் மகளிர் அணிகளுக்கான ரிகர்வ் பிரிவு போட்டியில் தீபிகா குமாரி, பம்பாய்லா தேவி, அன்கிதா ஆகியோர் அடங்கிய உலக வில்வித்தை அணி 5-1 என்ற கணக்கில் ஜப்பானைச் சேர்ந்த மவ் வடனாபி, ருகா யுஹேரா, டொமாகா ஒஹாஷியை (Mao Watanabe, Ruka Uehara, Tomaka Ohashi ) வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தியது.
ஆடவர் தனிநபர் ரிகர்வ் போட்டி:
முன்னதாக, ஆடவர் தனிநபர் ரிகர்வ் பிரிவு போட்டியில் இந்திய வீரர் அடானு தாஸ் 6-5 என்ற புள்ளிகள் கணக்கில் தென் கொரியாவின் ஜின் யேக்கை (Jin Hyek) தோற்கடித்து வெண்கலப் பதகத்தை வென்றார்.
கலப்பு இரட்டையர் ரிகர்வ் போட்டி:
நேற்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் ரிகர்வ் பிரிவில் இந்திய வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி, வீரர் அடானு தாஸ் ஜோடி வெண்கலம் வென்றிருந்தது. இதுவரை இந்தத் தொடரில் இந்திய வீரர் அடானு தாஸ் ரிகர்வ் பிரிவில் மூன்று வெண்கலப் பதக்கமும், வீராங்கனை தீபிகா குமாரி இரண்டு வெண்கலப் பதக்கமும் பெற்று அசத்தியுள்ளனர்.