சிறிய வயதில் 3 மணி நேரம் 31 நிமிடங்களில் 2222 அம்புகள் எய்து உலக அளவில் சாதனை செய்துள்ளார் 5 வயதே ஆன ரிஷிதேவ். இவரது சாதனை ஆசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளது.
ஜாலியான விளையாடிக் கொண்டிருக்கும் ரிஷிதேவின் கைகளில் வில் - அம்பைக் கொடுத்தால், சரியாக குறிவைத்து அம்புகளை எய்து அனைவரையும் அசர வைக்கிறார்.
3 வயதின் போதே ரிஷிதேவை முதலில் கைப்பந்து, குத்துச்சண்டை என ஒருசில விளையாட்டுகளில் பயிற்சிக்கு அனுப்பியுள்ளார்கள் அவரது பெற்றோர்கள் ஜெயக்குமாரும், ஸ்ரீலேகாவும். ஆனால் ரிஷிக்கு அதில் ஆர்வமில்லாததால், செல்ல மறுத்துள்ளார். பின்னர் தான் வில்வித்தை பயிற்சியை விளையாட்டாக மேற்கொண்டுள்ளனர். அதில் நாளடைவில் ஆர்வம் அதிகரிக்க, வில்வித்தை பயிற்சி அகாடமியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரிஷிதேவ் வில்வித்தை பயிற்சி அகாடமியில் சேர்த்துள்ளனர். முதலில் 12 வகுப்பு வரை அடிப்படை வில்வித்தை கற்றுக்கொடுப்ப்படும். அதனை ரிஷிதேவ் 8 வகுப்பிலேயே கற்றுக்கொண்டுள்ளார்.
இதன்மூலம் 2019ஆம் ஆண்டு மாநில அளவில் நடந்த ஐந்து வயதிற்குட்பட்டோருக்கான வில்வித்தை போட்டியில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து ரிஷிதேவும் வில்வித்தை பயிற்சியில் தீவிரம் காட்டியுள்ளார். இந்தக் காலத்தில் ரிஷிதேவின் அம்பு எய்யும் வேகம் அதிகரித்துள்ளது. கிட்டதட்ட ஒரு நிமிடத்தில் 6 அம்புகளை எய்துள்ளார். இதனைக் கண்ட அவரின் பயிற்சியாளர், அம்பு எய்யும் வேகத்தை அதிகரித்து அதை ஒரு சாதனையாக செய்யலாம் என பெற்றோர்களிடம் கூறியுள்ளார்.
தொடர்ந்து ரிஷிதேவின் அம்பு எய்யும் வேகத்தை அதிகரிக்கப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக 6 மணி நேரத்தில் ஆயிரத்து 800 அம்புகளை எய்து சாதனை படைக்கலாம் என திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் ரிஷிதேவின் ஈடுபாட்டால் 6 மணி நேரத்தில் 2020 அம்புகளை எய்துவிடலாம் என தீர்மானித்துள்ளனர்.
இதையடுத்து கொடுக்கப்பட்ட அந்தப் பயிற்சியின்போது 4 மணி நேரத்திலேயே 2222 அம்புகளை ரிஷிதேவ் எய்துள்ளார். இதையே சாதனையாக செய்யலாம் என ஏப்ரல் 14 தேதி அவருக்கு பயிற்சியைத் தொடங்கினோம். ஆனால் கரோனா காரணமாக அன்று நடத்த முடியவில்லை.