கடந்த 2008ஆம் ஆண்டு முதல் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் டிசிஎஸ் வேர்ல்ட் 10கே மாரத்தான் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தாண்டிற்கான டிசிஎஸ் வேர்ல்ட் 10கே போட்டி டிசம்பர் 20ஆம் தேதிமுதல் நடைபெற்று வருகிறது.
இதில் மகளிருக்கான மாரத்தான் போட்டியில் பெங்களூருவைச் சேர்ந்த ஐந்துமாத கர்ப்பிணியான அங்கிதா கவுர் பங்கேற்றார். இவர் 10 கிலோ மீட்டர் தூரத்தை 62 நிமிடத்தில் கடந்து அனைவரையும் வியக்கவைத்துள்ளார்.
'சாதிப்பதற்கு தாய்மை தடையில்லை'
இதுகுறித்து கூறிய அங்கிதா கவுர், "கடந்த ஒன்பது ஆண்டுகளாக நான் மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று வருகிறேன். தினசரி காலை வேளையில் நான் பயிற்சி எடுத்துவருகிறேன். அதனால் ஓடுவது எனது சுவாசம் போன்றது, இது எனக்கு இயல்பான ஒன்றுதான்.
வெளிப்படையாக கூறவேண்டும் எனில் கர்ப்ப காலத்தில் ஓடுவது நல்ல ஒரு உடற்பயிற்சி. அமெரிக்க சுகாதார கவுன்சிலும் இதனை உறுதிச் செய்துள்ளது. அவர்களும் கர்ப்ப காலங்களில் ஓட்டப்பயிற்சியை பரிந்துரைக்கின்றனர். இது குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. எனவே தான் நான் இந்தப் போட்டியில் பங்கேற்றேன்.
இதற்கு முன் இதே போட்டிக்களில் பங்கேற்று நான் பதக்கங்களையும் வென்றுள்ளேன். ஆனால் இம்முறை நான் கர்ப்பமாக இருப்பதால், மாரத்தான் போட்டியின் முதல் 5 முதல் 8 கிலோ மீட்டர் தூரம் வரை நான் மெதுவாக ஓடியும், நடந்தும் சென்றேன். அதனால் இம்முறை என்னால் முதல் பத்து இடங்களுக்குள் வர முடியாமல் போனது" என்று தெரிவித்தார்.