ஸா பாலோ (பிரேசில்): 2026 உலக கோப்பை கால்பந்து தொடரின் தகுதிச் சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. இதில் பிரேசில் - பொலிவியா இடையேயான ஆட்டம் நேற்று (செப். 8) நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் ரோட்ரிகோ, நெய்மர் தலா இரண்டு கோல்களையும், ரஃபின்ஹா 1 கோலும் அடித்தனர். இதன் மூலம் 5-க்கு 1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி பொலிவியா அணியை வீழ்த்தியது.
இந்த ஆட்டத்தில் நெய்மர் இரண்டு கோல்களை அடித்தார். இதன் மூலம் பீலேவை பின்னுக்கு தள்ளி பிரேசில் அணிக்காக அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையை நெய்மர் பெற்றார். பொலிவியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 61வது நிமிடம் உள்பட அடுத்தடுத்து நெய்மர் இரண்டு கோல்களை பதிவு செய்தார். இதனால் பிரேசில் அணி தகுதி சுற்றில் அபார வெற்றி பெற்றது.
இதையும் படிங்க:Asia Cup 2023: இந்தியா - பாகிஸ்தான் சூப்பர் 4 ஆட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு... ரிசர்வ் டே இருக்கா?
31 வயதான நெய்மர், ஏற்கனவே 77 கோல்கள் போட்டு மறைந்த முன்னாள் பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் பீலேவின் சாதனையை சமன் செய்து இருந்தார். இந்த போட்டி தொடங்கி 17வது நிமிடத்தில் பீலேவின் சாதனையை முறையடிக்க ஒரு அருமையான வாய்ப்பு நெய்மருக்கு கிடைத்தது. ஆனால் அந்த வாய்ப்பை நெய்மர் தவறவிட்டார். அவர் அடித்த பெனாலிட்டி கிக்கை பொலிவியா அணியின் கோல் கீப்பர் பில்லி விஸ்கார்ரா தடுத்தார்.
அதனை தொடர்ந்து சரியாக ஆட்டத்தின் 61வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட நெய்மர் பொவிலியாவுக்கு எதிராக கோல் அடித்தார். தனது அணிக்காக 125 போட்டிகளில் 78 கோல்களை பதிவு செய்து பீலேவின் சாதனையை முறியடித்தார். ஆனால், பீலே 77 கோல்களை அடிப்பதற்கு எடுத்து கொண்டது வெறும் 92 போட்டிகளே ஆகும். இருப்பினும் கோல்கள் கணக்கில் பின்னுக்கு தள்ளி தனது அணிக்காக அதிக கோல்களை அடித்த வீரர் என்ற பெருமையை நெய்மர் பெற்றார்.
சிறந்த கால்பந்து வீரராகக் கருதப்படும் பீலே, 1957 ஆம் ஆண்டு முதல் 1971 ஆம் ஆண்டு வரை பிரேசில் அணிக்காக 92 போட்டிகளில் விளையாடி 77 கோல்களை அடித்து உள்ளார். பீலே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது 82வது வயதில் காலமானார்.
இதையும் படிங்க:Asia Cup 2023: ரிசர்வ் டே குறித்து இலங்கை, வங்கதேசம் நோட்டீஸ்! ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கொடுத்த விளக்கம் என்ன?