தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

வெள்ளத்தில் எதிர்நீச்சல் அடித்து வெற்றிபெற்ற குத்துச்சண்டை வீரர்!

குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்பதற்காக, கடும் வெள்ளத்திலும் 2.5 கிலோ மீட்டர் நீச்சல் அடித்து போட்டியில் பங்கேற்ற நிஷான் மனோகரின்  சாகசம் பெரும் வியப்படைய செய்துள்ளது.

வெள்ளத்தில் எதிர்நீச்சல் அடித்து வெற்றிபெற்ற குத்துச்சண்டை வீரர்!

By

Published : Aug 13, 2019, 10:33 PM IST

"வெற்றிவேண்டுமா போட்டு பாரடா எதிர்நீச்சல்,
சரிதான் போடா தலைவிதி என்பது வெறும் கூச்சல்,
எண்ணி துணிந்தால் இங்கு என்ன நடக்காதது,
கொஞ்சம் முயன்றால் இங்கு எது கிடைக்காதது....

வாலி எழுதிய இப்பாடலுக்கு கர்நாடக குத்துச்சண்டை வீரர் நிஷான் மனோகர் இந்தக் கால தலைமுறைகளுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார். கர்நாடகாவின் பெல்காம் மாவட்டம் மன்னூர் கிராமத்தைச் சேர்ந்த இவர், 12ஆம் வகுப்பு படித்துவருகிறார். ஆகஸ்ட் 7ஆம் தேதி பெங்களூருவில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில், பெல்காம் மாவட்ட அணிக்காக இவர் பங்கேற்கவிருந்தார்.

ஆனால் கனமழையினால் கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களும் வெள்ளத்தால் தத்தளித்தன. இதில், இவரது கிராமம் மன்னூரிலும் தண்ணீர் கழுத்துப் பகுதிவரை நிரம்பியிருந்தது. அதேசமயம், மன்னூரை இணைக்கும் மூன்று சாலைகளும் வெள்ளத்தால் மூழ்கின.

வெள்ளத்தால் மூழ்கிய மன்னூர் கிராமம்

இதனால், தனது குத்துச்சண்டை கிட்டை பிளாஸ்டிக் பையில் கட்டிக்கொண்டு அதிகாலை 3.45 மணிக்கு நீச்சல் அடிக்கத் தொடங்கினார் நிஷான் மனோகர். வெள்ளத்தில் 2.5 கிலோ மீட்டர் நீச்சல் அடித்தப் பிறகு இவர் காலை 4.30 மணிக்கு பரோபரி சாலையை அடைந்தார். பின்னர், தனது அணியுடன் சேர்ந்து பெங்களூருவுக்கு புறப்பட்ட இவர் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

"இந்த வாய்ப்பிற்காகதான் நான் காத்திருந்தேன். இதனை இழக்க எனக்கு மனம் வரவில்லை. வெள்ளத்தால் எங்களது கிராமம் மூழ்கியதால் நீச்சல் அடித்து போட்டியில் பங்கேற்பது மட்டும்தான் வாய்ப்பாக அமைந்தது. இம்முறை எனக்கு ஏற்பட்ட துரதிர்ஷ்டத்தால் தங்கப்பதக்கம் வெல்லும் வாய்ப்பை நான் நழுவவிட்டேன். ஆனால், அடுத்த ஆண்டு நிச்சயம் தங்கப்பதக்கம் வெல்வேன்" என நம்பிக்கையுடன் கூறினார்.

குத்துச்சண்டை வீரர் நிஷான் மனோகர்

ABOUT THE AUTHOR

...view details