தூத்துக்குடி:கோவில்பட்டியில் உள்ள சர்வதேச செயற்கை புல்வெளி மைதானத்தில் தேசிய ஜூனியர் ஹாக்கி தொடர் கடந்த 16ஆம் தேதி தொடங்கி நேற்று (டிசம்பர் 27) வரை நடைபெற்றது. போட்டியில் மொத்தம் 27 மாநில அணிகள் பங்கேற்று விளையாடின.
போட்டியின் இறுதி நாளான நேற்று நடைபெற்ற மூன்றாம் மற்றும் நான்காம் இடத்திற்கான ஆட்டத்தில், ஒடிசா - ஹரியானா அணிகள் மோதின. இதில் 3-2 என்ற கோல் கணக்கில் ஒடிசா அணி வெற்றி பெற்று மூன்றாம் இடத்தை பிடிக்க, ஹரியானா நான்காம் இடத்தை தக்க வைத்தது.
கோப்பையை வென்றது உத்தரப் பிரதேசம்! இதையடுத்து, நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் உத்தரபிரதேசம் - சண்டிகர் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில்
3- 1 என்ற கோல் கணக்கில் சண்டிகார் அணியை வீழ்த்தி உத்தரபிரதேச அணி வெற்றி பெற்றது.
பரிசளிப்பு நிகழ்வு
அதனைத்தொடர்ந்து, நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மக்களவை உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் கீதாஜீவன், விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினர் அசோகன், ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினர் சண்முகையா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் ஆகியோர் கலந்துகொண்டு பரிசுக் கோப்பைகளை வழங்கினர்.
சாம்பியன் பட்டத்தை வென்ற உத்திரப் பிரதேச அணிக்கு தங்க சுழல் கோப்பை வழங்கப்பட்டது. இரண்டாம் இடத்தில் வெற்றி பெற்ற சண்டிகார் அணிக்கு வெள்ளிக் கோப்பை அளிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் இடத்தை பிடித்த ஒரிசா அணிக்கும், நான்காம் இடத்தைப் பிடித்த ஹரியானா அணிக்கும் வெண்கல கோப்பையை வழங்கினர். சிறந்த ஆட்டக்காரர்களுக்கு மெடல்கள் வழங்கப்பட்டன.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஹாக்கி போட்டியைக் கண்டு ரசித்தனர்.
இதையும் படிங்க: Hockey National Junior Championship: காலிறுதியில் வெளியேறியது தமிழ்நாடு!