கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும், விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது வைரஸின் தாக்கம் குறைந்து வரும் சூழலில் விளையாட்டு போட்டிகளை நடத்தவும், வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்திய ஹாக்கி அணியைச் சேர்ந்த வீரர்கள் கடந்த அக்டோபர் மதம் முதல் பெங்களூருவிலுள்ள இந்திய விளையாட்டு அமைச்சக பயிற்சி மையத்தில் தங்களது பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய ஹாக்கி அணியின் இளம் மிட்ஃபீல்டர் ஷம்ஷர் சிங், தான் இந்திய ஹாக்கி அணியின் ஒரு நம்பகமான வீரராக இருக்கவே விரும்புவதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய ஷம்ஷர் சிங், “நான் கடினமான பின்னணியில் இருந்து வந்திருக்கிறேன். எனது தந்தை ஒரு விவசாயி. அதனால் தொடக்கத்தில் என்னால் ஹாக்கி விளையாட்டுக்குத் தேவையான உபகரணங்களை வாங்குவதற்கு கூட கடும் சிரமத்தை சந்தித்தேன்.
அப்போது நான் கற்றுக்கொண்ட அனுபவம் பல கடினமான சூழலில் எனக்கு உதவியுள்ளது. மேலும் இந்த ஆண்டு முழுவதும் நாம் தொற்றுநோயுடன் போராடி வருகிறோம். இருப்பினும் நாம் நம்பிக்கையை கைவிடாது, நமது இலக்குகளை நோக்கி நகர வேண்டும்.
அதனால் நான் தவறவிட்ட பயிற்சிகளை மேற்கொள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்த விரும்புகிறேன். மேலும் இனிவரும் போட்டிகளில் இந்திய அணிக்கு ஒரு நம்பகமான வீரராக வலம் வர வேண்டுமென்பதே என்னுடைய குறிக்கோள். அதற்காக நான் கடுமையாக உழைத்து வருகிறேன்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:9 மாத இடைவெளிக்கு பிறகு பயிற்சிக்கு திரும்பும் இந்திய மகளிர் கால்பந்து அணி!