இந்திய மகளிர் ஹாக்கி அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. ஹாக்கி தொடர் ஜனவரி 25ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அந்தத் தொடரில் பங்கேற்கும் வீராங்கனைகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அந்த அணிக்கு ராணி ராம்பால் கேப்டனகாவும், சவிதா துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பயிற்சியாளர் ஜோயர்ட் மரிஜின் பேசுகையில், ''நியூசிலாந்து தொடர் எங்கள் அணியில் உள்ள வீராங்கனைகளிடையே நல்ல போட்டியை உருவாக்கும். இந்தத் தொடரில் 20 பேர் கொண்ட அணியுடன் பங்கேற்கவுள்ளோம். சில போட்டிகளில் 16 பேர் கொண்ட அணியைப் பயன்படுத்துவோம். ஏனென்றால் ஒலிம்பிக்கில் 16 பேர் கொண்ட அணியை மட்டுமே பயன்படுத்த முடியும்.
கடினமான நேரங்களில் எங்கள் அணி எப்படி செயல்படுகிறது என்பதைப் பார்க்க ஆவலாக உள்ளேன். அனைத்து வீராங்கனைகளும் அவர்களின் முழுத்திறமையையும் வெளிப்படுத்தி, அனைத்துப் போட்டிகளிலும் வெற்றிபெறவேண்டும்'' என்றார்.