டோக்கியோவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் ஹாக்கி போட்டிகளுக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் இந்தியாவின், புவனேஷ்வரில் நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஹாக்கி ஒலிம்பிக் தகுதிச்சுற்று ஆட்டத்தில் இந்தியா மகளிர் அணி, அமெரிக்கா மகளிர் அணியை எதிர்கொண்டது. முதல் லெக்கில் இன்று பலப்பரீட்சை நடத்தின.
இந்த ஆட்டத்தின் முதல் கால் பகுதி நேரத்தில் இரு அணி வீராங்கனைகளும் கோல் அடிக்காமல் சமநிலையில் இருந்தனர். அதன்பின் தொடங்கிய இரண்டாவது காலிறுதி நேர ஆட்டத்தில் இந்தியாவின் லிலிமா 28ஆவது நிமிடத்தில் இந்திய அணியின் முதல் கோலை பதிவு செய்தார்.
அதன்பின் மூன்றாவது காலிறுதி நேரத்தில் ஷர்மிளா ஒரு கோலும் குர்ஜித் இரண்டு கோல்களும் அடித்தனர். இதனால் இந்தியா 4-0 என முன்னிலைப் பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நான்காவது காலிறுதி ஆட்டம் தொடங்கியதும் 46ஆவது நிமிடத்தில் இந்திய அணியின் நவ்நீத் கோல் அடிக்க இந்தியா அணி 5-0 என்ற கோல் கணக்கில் நிலையில் முன்னிலைப் பெற்றது.
அதன்பின் ஆட்டத்தின் 54ஆவது நிமிடத்தில் அமெரிக்காவின் மேட்சன் ஆறுதல் கோல் அடித்தார். இதன்மூலம் ஆட்டநேர முடிவில் இந்திய மகளிர் அணி 5-1 கோல் கணக்கில் அமெரிக்க அணியை வீழ்த்தியது.
இதையும் படிங்க:ஒலிம்பிக் ஹாக்கி தகுதிச்சுற்றுக்கான இந்திய அணியில் மாற்றம்