ஜப்பானின் டோக்கியோ நகரில் அடுத்தாண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த ஒலிம்பிக் தொடரில் ஹாக்கி போட்டிகளில் பங்கேற்கும் அணிகளுக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடத்தப்பட்டுவருகின்றன.
எஃப்.ஐ.ஹெச். ஒலிம்பிக் ஹாக்கி தகுதிச் சுற்றில் அடுத்ததாக இந்திய ஆடவர் அணி ரஷ்யா அணியை எதிர்த்து விளையாடுகிறது. இப்போட்டி வரும் நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் ஒடிசாவின் புவனேஷ்வரில் நடைபெறுகிறது. இரண்டு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றிபெறும் அணி ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்றதாக அறிவிக்கப்படும்.
இதனிடையே இந்தத் தொடருக்கான ஆடவர் ஹாக்கி அணியில் இடம்பெற்றிருந்த தடுப்பாட்டக்காரர் வருண் குமாருக்கு தோள்பட்டை, வலது கையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் தகுதிச் சுற்றுப்போட்டியில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது.
இதனிடையே ஹாக்கி இந்திய வெளியிட்ட புதிய அறிவிப்பில் காயமடைந்த வருண் குமாருக்குப் பதிலாக பிரேந்தர் லக்ரா இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் இந்திய அணிக்காக இதுவரை 170-க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் ஆடிய அனுபவம் உடையவர்.
இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் 18 பேர் கொண்ட பட்டியல்: பிஆர் ஸ்ரீஜேஸ், கிரிஷான் பகதூர் பதாக், ஹர்மன்பிரீத் சிங், பிரேந்தர் லக்ரா, சுரேந்தர் குமார், குர்ரீந்தர் சிங், ரூபிந்தர் பால் சிங், அமித் ரோஹிதாஸ், மான்பிரீத் சிங் (கேப்டன்), நீலகண்ட சர்மா, ஹர்திக் சிங், விவேக் சாகர் பிரசாத், லலித் குமார் உபத்யாய், எஸ்.வி. சுனில், மந்தீப் சிங், அக்ஷதீப் சிங், ராமன்தீப் சிங், சிம்ரன்ஜீத் சிங்.