தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

2021 ஒலிம்பிக் தொடருக்காக காத்திருக்கும் இந்தியா! - மான்பிரீத் சிங்

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஹாக்கி விளையாட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணி, நிச்சயம் டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

After a dry 2020, Indian hockey teams aim for Olympic podium in 2021
After a dry 2020, Indian hockey teams aim for Olympic podium in 2021

By

Published : Dec 26, 2020, 2:47 PM IST

கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்தாண்டு நடைபெற இருந்த ஒலிம்பிக் தொடர் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்படுவதாக சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பு அறிவித்தது.

மேலும் வைரஸின் அச்சுறுத்தலினால் அனைத்து வகையான விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டு, விளையாட்டு வீரர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கி விளையாட்டில் இந்திய அணி 1980 ஆம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக் தொடரில் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. அதன்பின் கிட்டத்திட்ட 40 ஆண்டுகளாக ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் இந்திய ஹாக்கி அணி தங்கப்பதக்கம் வென்றதில்லை.

மாறாக கடந்த 2016ஆம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் இந்திய ஹாக்கிய அணி மோசமான தோல்விகளைச் சந்தித்து எட்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.

இதையடுத்து 2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்காக கடந்த நான்கு அண்டுகள் இந்திய ஹாக்கி அணியைச் சேர்ந்த வீரர்கள் கடும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அதற்குள்ளாக கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டும், வேறு சர்வதேச போட்டிகளும் ரத்து செய்யப்பட்டதாலும், மார்ச் மாதம் முதல் இந்திய ஹாக்கி அணி எந்த வித போட்டிகளிலும் பங்கேற்கமுடியாமல் போனது.

வைரஸின் தாக்கம் குறையத்தொடங்கியதை அடுத்து ஆகஸ்ட் மாதம் பெங்களூருவிலுள்ள தேசிய விளையாட்டு அமைச்சக பயிற்சி மையத்தில் இந்திய ஆடவர், மகளிர் அணியைச் சேர்ந்த வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்தது.

அப்போது பயிற்சிக்காக பெங்களூரு சென்றிருந்த இந்திய அணியின் கேப்டன் மான்பிரீத் சிங் உள்பட, ஆறு வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, அவர்கள் மருத்துவ கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டனர். மேலும் அவர்கள் ஆறு பேரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதுகுறித்து மான்பிரித் சிங் கூறுகையில்,”கரோனா வைரஸ் குறித்து நாங்கள் செய்திகள் வாயிலாக கேள்விப்பட்டுள்ளோம்.

ஆனால் நாங்கள் வைரஸால் பாதிக்கப்பட்ட போது மன அழுத்தமும், கவலையாகவும் இருந்தோம். ஹாக்கி விளையாட்டின் கடினமான சூழ்நிலையில் கூட நான் அவ்வாறு உணர்ந்தது கிடையாது.

ஆனால் நாங்கள் தனிமைப்படுத்தப்பட்ட போது எங்களுக்கு ஏற்பட்ட மன அழுத்தம் மிகவும் கொடுமையானது” என்று தெரிவித்திருந்தார்.

அதன்பின் பாதிக்கப்பட்ட வீரர்கள் அனைவரும் தொற்றிலிருந்து மீண்டு, சக வீரர்களுடன் தங்களது பயிற்சியை மேற்கொண்டனர். இதற்கிடையில் புரோ லீக் ஹாக்கி தொடருக்கான மாற்றியமைப்பட்ட தேதியை சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு வெளியிட்டது.

அதன்படி அடுத்த ஆண்டு ஏப்ரல் 10, 11 ஆகிய தேதிகளில் இந்திய அணி அர்ஜெண்டினாவுக்கு எதிராக விளையாடும் என்றும், மே 12, 13 ஆகிய தேதிகளில் ஸ்பெய்னுடனும், மே 18, 19 ஆகிய தேதிகளில் ஜெர்மனியுடனும், மே 30ஆம் தேதி நியூசிலாந்து அணியுடனும் விளையாடவுள்ளது.

இதுகுறித்து பேசிய கேப்டன் மான்பிரித் சிங், புரோ லீக் ஹாக்கி தொடரில் நாங்கள் அடுத்தடுத்து போட்டிகளில் பங்கேற்கவுள்ளது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஏனெனில் நாங்கள் ஒலிம்பி தொடருக்கு தயாராவதற்கு இப்போட்டிகள் உதவும் என்று தெரிவித்துள்ளார்.

ஆடவர் ஹாக்கி அணி ஒருபுறமிருக்க இந்திய மகளிர் ஹாக்கி அணியின் நிலை சற்று கடினமான சூழலையே சந்தித்து வருகிறது. ஏனெனில் ரியோ ஒலிம்பிக் தொடரில் பங்கேற்ற இந்திய மகளிர் ஹாக்கி அணி மோசமான தோல்விகளைச் சந்தித்து 12ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டிருந்தது.

இருப்பினும் 2020ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கு இந்திய ஹாக்கி அணி கடந்த 2019ஆம் ஆண்டு தகுதி பெற்றிருந்தது. ஆனால் அதற்குள்ளாக டோக்கியோ ஒலிம்பிக் தொடர் தள்ளிவைக்கப்பட்டிருப்பது இந்திய அணிக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மகளிர் ஹாக்கி அணி புரோ லீக் ஹாக்கி தொடருக்கு தகுதியடையாதது மற்றுமொரு ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஏனெனில் இந்த 2020ஆம் ஆண்டில் இந்திய மகளிர் ஹாக்கி அணி எந்தவொரு ஹாக்கி தொடரிலும் பங்கேற்கவில்லை.

மேலும் கடந்த ஜனவரி மாதம் நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய மகளிர் ஹாக்கி அணி ஐந்து போட்டிகள் கொண்ட பயிற்சி தொடரில் விளையாடியது.

இதன் முதல் போட்டியில் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணையை வீழ்த்தியது. இருப்பினும் அடுத்தடுத்த போட்டிகளில் நியூசிலாந்து அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை 1-2, 0- 1 என்ற கணக்கில் வீழ்த்தியது.

இத்தொடரில் நடைபெற்ற கடைசி ஆட்டத்தின் இந்திய அணி மீண்டும் 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவு செய்தது.

அதன் பின் கரோனா காரணமாக வீரர்கள் தங்களது வீடுகளிலேயே தனிமைபடுத்தப்பட்டு, மீண்டும் ஆகஸ்ட் மாதம் பயிற்சி பெற அனுமதியளிக்கப்பட்டது. அங்கு அவர்களின் உடற்தகுதியை சோதித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளர் ஸ்ஜேர்ட் மரிஜ்னே கூறியிருந்தார்.

இந்தியாவின் ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணிகள் அடுத்தாண்டு ஒலிம்பிக் தொடருக்காக தங்களை தீவிரமாக தயார்ப்படுத்தி வருகின்றனர்.

இதனால் அடுத்தாண்டு ஒலிம்பிக் ஹாக்கி விளையாட்டில் இந்திய ஹாக்கி அணி நிச்சயம் பதக்கம் வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க:மெல்போர்னில் டீன் ஜோன்ஸிற்கு மரியாதை!

ABOUT THE AUTHOR

...view details