கொல்கத்தா (மேற்கு வங்கம்): ஜெர்மனியின் புகழ்பெற்ற கால்பந்து கிளப் 'பேயர்ன் முனிச்' அணியில், இந்திய மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் விளையாடுகிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், மேற்கு வங்கம் சைக்கியா பகுதியைச் சேர்ந்த ஷுபோ பால் என்ற சிறுவன் விரைவில் ஜெர்மனிக்குப் பறக்கவிருக்கிறார்.
டெல்லி ஐ - லீக்கில் சுவேதா எஃப்சி அணிக்கு விளையாடிவந்த ஷுபோ பால், முதலில் சராசரியான இந்தியச் சிறுவனைப் போன்று கிரிக்கெட்டில்தான் விருப்பம். அவரின் அண்ணன்தான் கால்பந்து குறித்தான ஆர்வத்தை ஷுபோ பாலிடம் வளர்த்துள்ளார்.
குடும்பச் சூழல் காரணமாக ஷுபோ பாலின் அண்ணன் கால்பந்தை கைவிட்டு வேலைக்குச் செல்ல, சுபோ பால் அண்ணனின் ஆசையைத் தூக்கிச் சென்றுள்ளார்.
பத்து கோல் போதுமா
13 வயதுக்குள்பட்டோருக்கான சுவேதா எஃப்சி அணியில் இடம்பிடித்ததன் மூலம் கால்பந்தில் காலூன்றியுள்ளார் ஷுபோ பால். துடிப்புமிக்க சிறுவனான ஷுபோ பால் தனது முதல் போட்டியின்போதே தனது பயிற்சியாளரிடம் இந்தப் போட்டியில் நான் எத்தனை கோல் அடிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.
பத்து கோல் வேண்டும் அவர் சொல்ல, பன்னிரெண்டு கோல் அடித்து மிரட்டியிருக்கிறார் அந்தச் சுட்டிப்பையன்.
இப்படி ஆரம்பித்த ஷுபோவின் பயணம், அந்தத் தொடரின் 12 போட்டிகளில் 58 கோல்களை அடித்து அசால்ட் காட்டியுள்ளார். தொடக்கத்தில், அவர் உள்ளூர் போட்டிகளை விளையாடவதற்குப் பயிற்சியாளரின் மிதிவண்டியில் சென்றுள்ளார். அந்தளவிற்கு குடும்பச்சுழலில் சிக்குண்டிருக்கிறார். படிப்படியாக, 17ஆவது வயதில் அணியின் கேப்டன் பொறுப்பையும் ஏற்றுள்ளார்.
தேடுதல் வேட்டையில் சிக்கிய சிறுத்தை
உலக கால்பந்து கிளப் ஜாம்பவானும், உலகக் கோப்பையை வென்றவருமான கிளாஸ் கொந்தலர், அவரின் பயிற்சிக் குழுவினர் ஆகியோர் சேர்ந்து உலக அளவில் 17 வயதிற்குள்பட்ட 15 வீரர்களுக்கான பெரிய தேடுதல் வேட்டையை நடத்தியுள்ளனர்.
அதற்கு ஷுபோ பால்-இன் கால்பந்து காணொலிகள், ஷுபோ பால் குறித்த தகவல்கள் போன்றவற்றை பேயர்ன் முனிச் அணிக்கு ஷுபோ பால்-இன் பயிற்சியாளர் தபன் கர்மக்கர் அனுப்பிவைத்துள்ளார்.
ஷுபோ பாலின் திறனைக் கண்ட பேயர்ன் முனிச், வா செல்லம் வா வா செல்வம் என்று ஷுபோ பாலை பேயர்ன் முனிச் வேல்ட் ஸ்குவாடிற்குத் (WORLD SQUAD) தட்டித்தூக்கியுள்ளது. இந்தத் தகவலை அறிந்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா தனது ட்விட்டர் பக்கத்தில் ஷுபோ பாலுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஜெர்மனி நாட்டின் முனிச் நகருக்குச் செல்லும் 15 பேர் கொண்ட இந்த இளம் பேயர்ன் முனிச் உலக அணி, அடுத்த மாதம் பேயர்ன் இளைஞர் அணியுடன் மோதவுள்ளது. அதற்குமுன், மெக்சிகோவில் 19 வயதுக்குள்பட்டோரின் மெக்சிகோ அணியுடனும் மோதுகிறது. அதன்பின்னர், பன்டெஸ்லிகா இளைஞர் அணியுடனும் விளையாட இருக்கிறது.
பேயர்ன் முனிச் தான் கோல்
இத்தனை போட்டிகளிலும் சிறப்பாக விளையாடும்பட்சத்தில், பேயர்ன் முனிச் அணிக்காக விளையாடத் தேர்ந்தெடுக்கப்படுவார் எனக் கூறப்பட்டுள்ளது.
கிறிஸ்டியானோ ரோனால்டோ, ராபர்ட் லெவாண்டோவ்ஸ்கி ஆகியோர்தான் இஷ்டதெய்வம் எனக் கூறும் ஷுபோ பால், சாம்பியன்ஸ் லீக்கில் பேயர்ன் முனிச் அணிக்காக விளையாட வேண்டும் என்பதே லட்சியம் என்று கூறியுள்ளார்.
சச்சின், தோனிகளையே நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்க, நெய்மர்போல் ஒரு கால்பந்து வீரர் இந்தியாவில் உருவெடுப்பதற்கான வாய்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிரெஞ்சு ஓபன்: செம்மண்ணில் நடாலை மண்ணைக் கவ்வவைத்த ஜோகோவிச்