விளையாட்டுத் துறையில் மிக உயரிய விருதான லாரஸ் விளையாட்டு விருதுகள் ஆண்டுதோறும் சிறந்த விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கப்படும். மொனாக்கோவைச் சேர்ந்த லாரஸ் அறக்கட்டளை இவ்விருதை 2000ஆம் ஆண்டிலிருந்து வழங்கிவருகிறது.
அந்தவகையில், 20ஆவது லாரஸ் விருது விழா நேற்று ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெற்றது. இதில், 2019ஆம் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரருக்கான விருது ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில் ஆறுமுறை உலக சாம்பியன் பட்டம் வென்ற லூயிஸ் ஹாமில்டன், ஆறுமுறை ஃபிபா சிறந்த கால்பந்து விருது வென்ற அர்ஜென்டினாவின் மெஸ்ஸி ஆகியோருக்குப் பகிர்ந்து வழங்கப்பட்டது.
20 ஆண்டுகால லாரஸ் விருது வரலாற்றில் சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை இருவர் பெறுவது இதுவே முதல்முறையாகும். இதன்மூலம், இவ்விருதை வென்ற முதல் கால்பந்தாட்ட வீரர் என்ற சாதனை படைத்து சரித்திரத்தில் இடம்பிடித்துள்ளார் மெஸ்ஸி.
லாரஸ் விருதை வென்ற லூயிஸ் ஹாமில்டன், மெஸ்ஸி
இவ்விருது விழாவில் தான் பங்கேற்காததற்கு மன்னிப்பு கேட்பதாகவும், இந்த விருதை வென்ற முதல் கால்பந்தாட்ட வீரர் என்பதில் தனக்கு பெருமையாக இருப்பதாகவும் மெஸ்ஸி தெரிவித்தார். மேலும் தனது அணி வீரர்கள் இல்லையென்றால் இந்த விருது சாத்தியமில்லை எனவும் தான் இந்த விருது பெற இணையதளத்தில் வாக்களித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
லாரஸ் உலக சிறந்த அணிக்கான விருதை, 2019 ரக்பி உலகக்கோப்பையை வென்ற தென் ஆப்பிரிக்க அணி 2ஆவது முறையாக தட்டிச் சென்றது. அதேபோல், 2019ஆம் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான விருது அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸுக்கு வழங்கப்பட்டது. அவர் மூன்றாவது முறையாக இந்த விருதை வென்றுள்ளார்.
20 ஆண்டுகளில் விளையாட்டின் சிறந்த தருணத்திற்கான லாரஸ் விருதை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் வென்று சாதனை படைத்தார். சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அளிக்கும் வாக்கு எண்ணிக்கைகளின் அடிப்படையில் இவ்விருதுகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:லாரஸ் விருதை வென்று புதிய உச்சம் தொட்ட ‘லிட்டில் மாஸ்டர்’!