கால்பந்து போட்டிகளில் ஒரு அணியின் வீரர் எதிரணி வீரர்கள் கோல் அடிப்பதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டால், எதிரணி வீரர்களுக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்படும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி எதிரணியினர் பெரும்பாலும் கோல் அடித்து விட முடியும். காரணம் கோல் கீப்பர் மட்டுமே அவர் பெனால்டி ஷாட்டை தடுக்கும் தடுப்பு வீரராக இருப்பார். எனவே அவர் ஒருவரை தாண்டி கோல் அடிப்பது என்பது அவ்வளவு கஷ்டமான காரியமாக இருக்கப்போவதில்லை.
இருப்பினும் கோல் கீப்பர்கள் போஸ்ட்டை நோக்கி அடிக்கும் கோல்களை தடுத்து நிறுத்துவார்கள். ஆனால் இங்கு ஒரு வீரர் கோல் போஸ்ட் இருப்பதை மறந்துவிட்டு ஆகாயத்தை நோக்கி பெனால்டி ஷாட் அடித்து மிகவும் மோசமான பெனால்டி ஷாட் அடித்த வீரர் என்ற மோசமான சாதனையைப் படைத்திருக்கிறார்.
தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் அரேபியன் கல்ஃப் லீக் தொடரில்தான் இது அரங்கேறியுள்ளது. இந்தத் தொடரில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற போட்டியில் அல் அலி, அல் வாஹ்தா அணிகள் மோதின. இப்போட்டியின் 11ஆவது நிமிடத்தில் அல் வாஹ்தா அணியின் டிபென்டர் அல்-ஹுசைன் செயத் தவறால், அல் அலி அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது.
அப்போது அந்த பெனால்டி ஷாட்டை அடிக்க பிரேசில் வீரர் லியோனார்டோ முயன்றார். அவர் வேகமாக ஓடிவந்து வழுக்கியவாறு பந்தை எட்டி உதைத்தார். இதனால் அவர் நினைத்தபடி செல்லாத பந்து கோல் போஸ்டிற்கு மேல் சென்றதால் அந்த பெனால்டி வாய்ப்பு வீணானது. கோல் கீப்பருக்கு கஷ்டம் வைக்காத லியோனார்டோவின் இந்த பெனால்டி ஷாட் முயற்சி மோசமான பெனால்டி வரிசையில் இணைந்தது.
பிரேசில் வீரர் அடித்த மோசமான பெனால்டி ஷாட் இருப்பினும் இந்தப் போட்டியில் அல் அலி அணி 4-0 என்ற கோல் கணக்கில் அல் வாஹ்தா அணியை வீழ்த்தியது. அதில் லியோனார்டோவும் ஒரு கோல் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனைக்கும் அடிசறுக்கும் என்பதைப் போல் இங்கும் அடி சறுக்கியதாலே லியோனார்டோ கோல் வாய்ப்பை இழந்தார் என்பது தெளிவாகிறது.