கால்பந்து நட்சத்திரம் டியாகோ மரடோனா மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள், பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அர்ஜென்டினா கால்பந்து அணி முன்னாள் கேப்டன் மரடோனா (60), மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் இரவு காலமானார்.
ரசிகர்களின் உருக்கமான அஞ்சலியுடன் மரடோனாவின் உடல் நல்லடக்கம்! - கால்பந்து நட்சத்திரம் டியாகோ மரடோனா உயிரிழப்பு
மாரடைப்பால் மரணமடைந்த கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனாவின் உடல், பெல்லா விஸ்டா கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று அவரது இறுதி ஊர்வலம் புவெனஸ் அயர்ஸிலுள்ள காசா ரோசாடா அதிபர் நிர்வாக மாளிகையில் நடைபெற்றது. காலை 9.15 மணிக்கு தொடங்கிய இந்த இறுதிச்சடங்கில் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், நண்பர்களுக்கு சில மணி நேரம் ஒதுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிபர் அலுவலகத்தின் முக்கியக் கூடத்தில் வைக்கப்பட்டிருந்த மரடோனாவின் உடலுக்கு, அந்நாட்டின் தேசியக்கொடி, அர்ஜென்டினா கால்பந்து அணியின் 10ஆம் எண் ஜெர்சி ஆகியவை போர்த்தப்பட்டன. மேலும், இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள், ஒருவர் பின் ஒருவராக தாங்கள் கொண்டுவந்த பதக்கங்கள், வெவ்வேறு கால்பந்து அணிகளைச் சேர்ந்த ஜெர்சிகளை கண்ணீருடன் சவப்பெட்டியின் அருகே வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து, அவரது உடலை அதிபர் மாளிகையிலிருந்து பெல்லா விஸ்டா கல்லறைக்கு கடும் பாதுகாப்பில் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அவரது மறைவையொட்டி அந்நாட்டில் மூன்று நாள்கள் துக்கம் அனுசரிக்க அர்ஜென்டின அதிபர் உத்தரவிட்டுள்ளார்.