கரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காரணமாக கால்பந்து, கிரிக்கெட், டென்னிஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இத்தொற்றின் தாக்கம் ஐரோப்பிய நாடான இத்தாலியில் அதிகமாக இருந்ததால், மார்ச் முதல் வாரத்திலிருந்து நடக்கயிருந்த சீரி ஏ சீசன் கால்பந்துப்போட்டி தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக, இத்தாலி முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. கரோனா வைரஸால் அந்நாட்டில் கடந்த இரண்டு மாதங்களாக அதிகரித்து வந்த பாதிப்புகளும், உயிரிழப்புகளும் சமீப நாள்களாக குறையத்தொடங்கியுள்ளன. இதுவரை இத்தாலியில் ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 675 பேர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 64 ஆயிரத்து 928 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 26 ஆயிரத்து 644 பேர் உயிரிழந்துள்ளனர்.
இத்தாலியில் சமீப நாள்களாக கரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் இருப்பதால், மே 4ஆம் தேதியிலிருந்து ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என அந்நாட்டு பிரதமர் கியூசெப் கோன்டே தெரவித்துள்ளார். மேலும் அவர், மே 4ஆம் தேதியிலிருந்து சீரி ஏ கிளப் கால்பந்து அணிகளின் வீரர்கள் மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கூறினார்.