இங்கிலாந்து கால்பந்து அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்தவர் வெய்ன் ரூனி. இங்கிலாந்தின் பிரபல கால்பந்து கிளப் அணியான மான்செஸ்டர் யுனைடெட் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த ரூனி, அந்த அணிக்காக அதிக கோல்களை அடித்தவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
தற்போது 35வயதான வெய்ன் ரூனி, சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று (ஜனவரி 16) அறிவித்தார். கால்பந்து விளையாட்டில் ஒரு ஜாம்பவானாக திகழ்ந்த ரூனி, சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளது கால்பந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையடுத்து, ரூனி இங்கிலாந்தின் உள்ளூர் கால்பந்து கிளப்பான டெர்பி கவுண்டி கால்பந்து அணியின் மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இத்தகவலை டெர்பி கவுண்டி கால்பந்து அணி உறுதிசெய்துள்ளது.
இதுகுறித்து டெர்பி கவுண்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிளப்பின் புதிய மேலாளராக வெய்ன் ரூனி நியமிக்கப்பட்டதை உறுதிப்படுத்தியதில் டெர்பி கவுண்டி கால்பந்து கிளப் மகிழ்ச்சியடைகிறது. அதன்படி 2023ஆம் ஆண்டு வரை வெய்ன் ரூனி டெர்பி கவுண்டி கால்பந்து அணியின் மேலாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆடவர் கால்பந்து அணிகளுக்கான ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டிகள்!