சர்வதே கால்பந்து கிளப் போட்டிகளில், ஸ்பெனில் நடைபெறும் லா லீகா முக்கியத்துவம் வாய்ந்தது. இரு முன்னணி கால்பந்து கிளப் அணிகளான ரியல் மாட்ரிட் மற்றும் பார்சிலோனாவுக்கு இடையே ஆண்டுதோறும் லா லீகாப் பட்டத்திற்கான போட்டாப்போட்டி அனல் பறக்கும்.
இந்நிலையில் இந்தாண்டிற்கானப் பட்டத்தை ரியல் மாட்ரிட் அணி நேற்றுத் தட்டிச்சென்றது. விலாரியல் என்ற அணியுடன் நடைபெற்ற போட்டியில் நடைபெற்ற மோதலில் 2-1 என்ற கோல் கணக்கில் ரியல்மாட்ரிட் அணி வெற்றிபெற்றது. ஆட்டத்தின் 29, 77 ஆவது நிமிடங்களில் ரியல் மாட்ரிட் அணியைச் சேர்ந்த ஸ்ட்ரைக்கர் கரிம் பென்சிமா அடித்த கோல் மூலம் 2-0 என ரியல் மாட்ரிட் முன்னணிலை பெற்றது. 83ஆவது நிமிடத்தில் விலாரியல் அணி வீரர் இபோரா பதில் கோல் அடித்தார். ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் முறையான தடுப்பாட்டத்தின் மூலம் ரியல் மாட்ரிட் அணி வெற்றியைத் தக்கவைத்தது.
இந்த வெற்றியின் மூலம் 86 புள்ளிகளுடன் ரியல் மாட்ரிட் அணி இந்தாண்டு சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது. இரண்டாவது இடத்திலிருக்கும் பார்சிலோன அணி 79 புள்ளிகளுடன் உள்ளது. இரு அணிகளுக்கு இன்னும் ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் அந்தப்போட்டியில் ரியல் மாட்ரிட் தோற்று பார்சிலோனா வெற்றிபெற்றாலும் புள்ளிப்பட்டியலில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை.