தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

யூரோ 2020: பின்லாந்து, பெல்ஜியம் அசத்தல் வெற்றி; டிராவில் முடிந்த வேல்ஸ் vs சிவிஸ் ஆட்டம்

யூரோ 2020 கால்பந்து தொடரில் நேற்று (ஜூன் 13) நடைபெற்ற மூன்று போட்டிகளில் டென்மார்க் அணிக்கு எதிராக பின்லாந்து அணியும், ரஷ்யா அணிக்கு எதிராக பெல்ஜியம் அணியும் வெற்றி பெற்றது. வேல்ஸ் - சுவிட்சர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி டிராவில் முடிவடைந்தது.

யூரோ 2020 கால்பந்து தொடரின் இன்றைய போட்டி
யூரோ 2020 கால்பந்து தொடரின் இன்றைய போட்டி

By

Published : Jun 13, 2021, 2:19 PM IST

ஐரோப்பாவின் முன்னணி அணிகள் பங்கேற்கும் யூரோ 2020 கால்பந்து போட்டித் தொடர் நேற்று முன்தினம் (ஜூன் 11) தொடங்கியது. 2020ஆம் ஆண்டில் நடைபெறவிருந்த இத்தொடர் கோவிட்-19 தொற்று காரணமாக ஒத்திவைக்கபட்ட நிலையில், நேற்று முன்தினம் தொடங்கியுள்ளது.

நேற்றைய ஆட்டங்கள்

இரண்டாம் நாளான நேற்று (ஜூன் 12) மூன்று போட்டிகள் நடைபெற்றன. நேற்றைய முதல் போட்டி, வேல்ஸ் - சுவிட்சர்லாந்து அணிகளுக்கு இடையே இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது.

இரண்டாவதாக, டென்மார்க் - பின்லாந்து மோதிய போட்டி இரவு 9.30 மணிக்கும், மூன்றாம் போட்டியில் பெல்ஜியம் - ரஷ்யா அணிகள் நள்ளிரவு 12.30 மணிக்கும் மோதின.

வேல்ஸ் vs சுவிட்சர்லாந்து

அஜர்பைஜானில் நடைபெற்ற போட்டியில், குரூப் 'ஏ' பிரிவில் வேல்ஸ் அணியும் சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியில், இரு அணிகளும் ஆக்ரோஷமாக விளையாட முதல் பாதியில் யாரும் கோல் கணக்கை தொடங்கவில்லை

இரண்டாம் பாதியில், சுவிஸ் வீரர் எம்போலோ 49ஆவது நிமிடத்தில் கோலடித்து அணியை முன்னிலை பெறச்செய்தார். இதற்கு பதிலடியாக, வேல்ஸ் அணியின் கீஃபர் மூர் 74ஆம் நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால், 1-1 என்ற கோல் கணக்கில் போட்டி சமனில் முடிந்தது.

கடினமான போட்டி

நேற்றைய இரண்டாம் ஆட்டத்தில், டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகன் மைதானத்தில் குரூப் 'பி'-ஐ சேர்ந்த டென்மார்க் - பின்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியின் முதல் பாதியில் டென்மார்க் முன்கள வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் பேச்சு மூச்சற்று மயங்கி விழுந்தார். இதனால் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்பின், மருத்துவமனையில் எரிக்சன் சுயநினைவு அடைந்துவிட்டார் என்ற தெரிவிக்கப்பட்டதை அடுத்து, போட்டி மீண்டும் தொடங்கியது. இதில், பின்லாந்து வீரர் ஜோயல் 59ஆவது நிமிடத்தில் அடித்த கோல்லினால், பின்லாந்து 1-0 கோல்கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தியது

பெல்ஜியம் அசத்தல் வெற்றி

ரஷ்யாவின் க்ரெஸ்டோவ்ஸ்கி மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில், குரூப் 'பி'-ஐ சேர்ந்த பெல்ஜியம் - ரஷ்யா அணிகள் விளையாடின. ஆட்டத்தின் தொடக்கம் முதலே பெல்ஜியம் ஆதிக்கம் செலுத்திவந்த நிலையில், 10ஆவது நிமிடத்தில் ரொமேலு லுகாகு கோல் அடித்து மிரட்டினார்.

இந்த கோலை தனது நண்பரான எரிக்சனுக்கு லுகாகு சமர்பணம் செய்த நிகழ்வு ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்தது.

அதைத்தொடர்ந்து, தாமஸ் மியூனியர் 34ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார். போட்டி முடியும் தருவாயில்(88ஆவது நிமிடம்) லுகாகு மீண்டும் ஒரு கோல் அடிக்க, பெல்ஜியம் 3-0 என்ற கோல் கணக்கில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து, குரூப் 'பி'-இல் முதலிடம் பெற்றுள்ளது.

இன்றைய ஆட்டங்கள்

யூரோ 2020 கால்பந்து தொடரின் மூன்றாம் நாளான இன்று (ஜூன் 13), மூன்று போட்டிகள் நடைபெறுகின்றன. குரூப் 'டி'-இல் இடம்பெற்றுள்ள குரேஷியா - இங்கிலாந்து அணிகள் இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு மோதுகின்றன.

அதற்கடுத்து, இரவு 9.30 மணிக்கு குரூப் 'சி'-இல் இடம்பெற்றுள்ள ஆஸ்திரியா, வடக்கு மாசிடோனியா அணிகள் விளையாடுகின்றன.

இறுதியாக, குரூப் 'சி'-ஐ சேர்ந்த நெதர்லாந்து, உக்ரைன் அணிகள் மோதும் போட்டி நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும்.

இதையும் படிங்க: களத்தில் மயக்கமடைந்த டென்மார்க் வீரர்; அதிர்ச்சியில் உறைந்த கால்பந்து உலகம்

ABOUT THE AUTHOR

...view details