இந்தியன் சூப்பர் லீக் என்றழைக்கப்படும் ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஆறாவது சீசன் கடந்தாண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, ஒடிசா அணியை எதிர்கொண்டது.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே ஒடிசா அணியின் மனூல் ஒன்யூ கோலடித்து அணியின் கோல் கணக்கைத் தொடக்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 6’ஆவது நிமிடத்தில் கேரளா அணியின் நாராயண் தாஸ் கோலடித்து பதிலடி கொடுத்தார்.
அதன்பின் கேரளாவின் ரஃபேல் மெஸ்ஸி ஆட்டத்தின் 28’ஆவது நிமிடத்தில் கோலடிக்க, அதனை ஈடுகட்டும்விதமாக ஒடிசா அணியின் மனூல் ஆட்டத்தின் 36’ஆவது நிமிடத்தில் மீண்டுமொரு கோலடித்து அசத்தினார். இரு அணி வீரர்களும் மாறி மாறி கோலடித்து அசத்தியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது.
அதனையடுத்து ஒடிசா அணியின் மார்டின் பெரஸ் ஆட்டத்தின் 44’ஆவது நிமிடத்தில் கோலடித்ததன் மூலம், முதல் பாதி ஆட்டநேர முடிவில் ஒடிசா அணி 3-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. பின் ஆட்டத்தின் இரண்டாம் பாதி தொடங்கிய சில நிமிடங்களிலேயே (51) ஒடிசாவின் மனூல் மீண்டுமொரு கோலடித்து அணியின் வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து தோல்விலிருந்து மீள போராடிக்கொண்டிருந்த கேரளா அணிக்கு பார்தலோமெவ் ஓபச் (Bartholomew ogbheche) ஆட்டத்தின் 82’ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி கோலடித்து அசத்தினார். பின் ஆட்டத்தின் கூடுதல் நேரமான 90+4’ஆவது நிமிடத்தில் மீண்டுமொரு கோலடித்து அணியை தோல்வியிலிருந்து மீட்டெடுத்தார்.
இதன்மூலம் இரு அணிகளும் 4-4 என்ற கோல் கணக்கில் நீடித்ததால் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. மேலும் இப்போட்டியானது இவ்விரு அணிகளுக்கும் இந்த சீசனில் நடைபெறும் கடைசிப்போட்டியாகும்.
இதையும் படிங்க: 1000 கோல்... கால்பந்து வரலாற்றில் புதிய உலக சாதனை படைத்த மெஸ்ஸி!