இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஆறாவது சீசனில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கோவா எஃப்.சி. அணி, ஒடிசா அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் முதல் பாதி முதலே தனது ஆதிக்கத்தைச் செலுத்திய கோவா அணி ஆட்டத்தின் 21ஆவது நிமிடத்தில் வினித் ராய் கோல் கணக்கைத் தொடங்கிவைத்தார்.
அதனைத்தொடர்ந்து அந்த அணியின் நட்சத்திர வீரர் ஜாக்கிசந்த் சிங் ஆட்டத்தின் 24, 26ஆவது நிமிடத்தில் அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து கோவா அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார். இதன்மூலம் கோவா அணி முதல் பாதி ஆட்டநேர முடிவில் 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
அதன்பின் தோல்வியை தவிர்க்கப் போராடிவந்த ஒடிசா அணியில் மேன்வல் ஆன்வூ (manuel onwu) இரண்டாம் பாதி ஆட்டத்தின் 59, 65ஆவது நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து அணிக்கு நம்பிக்கையளித்தார். இதனையடுத்து பதிலுக்கு கோவா அணியின் ஃபெரான் கொரோமினாஸ் (ferran corominas)ஆட்டத்தின் கடைசி நிமிடமான 90ஆவது நிமிடத்தில் கோலடித்து அசத்தினார்.
இதன்மூலம் கோவா எஃப்.சி. அணி 4-2 என்ற கோல் கணக்கில் ஒடிசா அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றிபெற்றது. மேலும் இந்தச் சீசனில் 30 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலிலும் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.
இதையும் படிங்க: ஆஸ்திரேலியன் ஓபன்: ஆபாச வார்த்தை பேசிய சாம்பியனுக்கு அபராதம் விதிப்பு