இந்த ஆண்டுக்கான இந்தியன் சூப்பர் லீக் கால்பந்துத் தொடரின் இறுதிப்போட்டி கோவாவில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் தலா இரு முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னையின் எஃப்சி - கொல்கத்தாவின் ஏடிகே அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
விறுவிறுப்பான இந்த போட்டியின் தொடக்கம்முதலே தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கொல்கத்தா அணியின் ஜாவி ஹெர்னாண்டஸ் (Javi Hernández) ஆட்டத்தின் 10ஆவது நிமிடத்தில் கோலடித்து அணியின் கோல் கணக்கை துவக்கி வைத்தார்.
பின் இதற்கு பதிலடி கொடுக்கும் முயற்சியில் ஆடிய சென்னை அணியின் அனைத்து யுக்திகளும் எதிரணியின் டிஃபென்ஸ்ஸால் தவிடுபொடியானது. இதன் மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் கொல்கத்தா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.
இதனையடுத்து நடைபெற்ற ஆட்டத்தின் இரண்டாம் பாதி ஆட்டத்தின் 48ஆவது நிமிடத்திலேயே கொல்கத்தா அணியின் எடு கார்சியா மீண்டுமொரு கோலடித்து சென்னை அணியின் வெற்றிக்கனவை தகர்த்தார். பின் தங்களது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை அணிக்கு, ஆட்டத்தின் 69ஆவது நிமிடத்தில் வெல்ஸ்கிஸ் கோலடித்து ஆறுதலளித்தார்.
அதனைத்தொடர்ந்து ஆட்டத்தின் கூடுதல் நேரமான 90+3வது நிமிடத்திலும் கொல்கத்தாவின் ஜாவி ஹெர்னாண்டஸ் கோலடித்து அசத்த, ஆட்டநேர முடிவில் கொல்கத்தாவின் ஏடிகே அணி 3-1 என்ற கோல்கணக்கில் சென்னையின் எஃப்சி அணியை வீழ்த்தி, மூன்றாவது முறையாக ஐஎஸ்எல் கோப்பையைக் கைப்பற்றி சாதனைப்படைத்தது. மேலும் ஐஎஸ்எல் தொடரில் அதிக முறை கோப்பையைக் கைப்பற்றிய அணி என்ற சாதனையையும் கொல்கத்தாவின் ஏடிகே அணி படைத்துள்ளது.
இதையும் படிங்க:'ஐபிஎல் போட்டிகளில் மாற்றம் நிகழும்' - கங்குலி