ஸ்பெயினின் லா லிகா கால்பந்து தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. நடப்பு சீசனில் ரியல் மாட்ரிட் - பார்சிலோனா அணிகளுக்கு இடையேயான போட்டி பார்சிலோனா நகரில் உள்ள கேம்ப் நௌ மைதானத்தில் அக்டோபர் 26ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது.
ஆனால் கேட்டலோனியா பகுதி மக்களுக்காக தனி நாடு வேண்டும் எனக்கோரி நடத்தப்பட்ட வாக்கெடுப்பு அரசுக்கு எதிரானதாக கூறி 12 பிரிவினைவாத தலைவர்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கியது. இதை எதிர்த்து அங்குள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பார்சிலோனா நகர் முழுவதிலும் பதற்றமான சூழல் நிலவியதால் இரு அணிகளுக்கும் இடையே நடைபெறயிருந்த போட்டி பாதுகாப்பு காரணம் கருதி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பால் கால்பந்து ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். இதைத் தொடர்ந்து லா லிகா நிர்வாகம் போட்டியை மாட்ரிட்டிற்கு மாற்ற முயற்சித்தது. ஆனால் இரு அணிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் புதிய தேதியை முடிவு செய்யுமாறு ரியல் மாட்ரிட் - பார்சிலோனா அணிகளுக்கு ராயல் ஸ்பானிஷ் கால்பந்து கூட்டமைப்பு காலக்கெடு வழங்கியது.
இந்த சூழலில் தற்போது இரு அணியினரும் டிசம்பர் 18ஆம் தேதி இந்தப் போட்டியை நடத்த முடிவு செய்து அதை கால்பந்து கூட்டமைப்பிற்கு பரிந்துரைத்தது. இதனிடையே ஸ்பானிஷ் கால்பந்து கூட்டமைப்பு எல் கிளாஸிகோ என்றழைக்கப்படும் ரியல் மாட்ரிட் - பார்சிலோனா போட்டி டிசம்பர் 18ஆம் தேதி நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ரியல் மாட்ரிட் - பார்சிலோனா போட்டி இந்த அறிவிப்பு ஸ்பெயின் கால்பந்து ரசிகர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தியிருக்கிறது. பரம எதிரிகளான பார்சிலோனா - ரியல் மாட்ரிட் அணிகள் நடப்பு சீசனில் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.