புடாபெஸ்ட் (ஹங்கேரி): ஐரோப்பாவின் முன்னணி அணிகள் பங்கேற்கும் 2020 யூரோ கால்பந்து போட்டித் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. குரூப் 'எஃப்' பிரிவில் நேற்று (ஜூன் 15) நடைபெற்ற ஆட்டத்தில் ஹங்கேரி அணி போர்ச்சுகல் அணியை எதிர்கொண்டது.
குரூப் 'எஃப்' பிரிவில் இடம்பெற்றுள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி 4-3-2-1 என்ற அணிவரிசையிலும், ஆடம் ஸ்லாய் தலைமையிலான ஹங்கேரி அணி 3-5-2 என்ற அணி வரிசையிலும் ஆட்டத்தை சந்தித்தன.
முதல் பாதியில், ஏறத்தாழ மூன்று முயற்சிகளை போர்ச்சுகல் கேப்டன் ரொனால்டோ தவறவிட்டார். இரண்டு அணிகளும் முட்டிமோதிக் கொண்டபோதும் முதல் பாதியில், ஒரு கோல் கூட பதிவாகவில்லை.
தண்ணிக்காட்டிய ரொனால்டோ
இரண்டாம் பாதியின் 84ஆவது நிமிடத்தில்தான், போர்ச்சுகல் வீரர் ரபேல் குரேரோ அடித்த கோல் மூலம் போர்ச்சுகல் அணி முன்னிலை பெற்றது. முதற்பாதியில் கோலடிக்க முடியாமல் தவித்த ரொனால்டோவிற்கு 87ஆவது நிமிடத்தில் ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைக்க, அதை கோலாக மாற்றி அசத்தினார்.
இதன்பின்னர், ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில், ஹங்கேரி பாக்ஸில் அத்தனை வீரர்களுக்கும் 'தண்ணிக்காட்டி' கோல் அடித்த ரொனால்டோ, யூரோ கோப்பை தனது 11ஆவது கோலை பதிவு செய்தார். இதன்மூலம் யூரோ கோப்பையில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வென்றது போர்ச்சுகல்
இப்போட்டியை, போர்ச்சுகல் அணி 3-0 என்ற கோல் கணக்கில், ஹங்கேரியை வீழ்த்தி குரூப் 'எஃப்' பிரிவில் முதலிடத்தை பிடித்துள்ளது.
இதையும் படிங்க: இந்தியா vs இங்கிலாந்து மகளிர் டெஸ்ட்: இங்கிலாந்து அணி பேட்டிங்