இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஆறாவது சீசனுக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நேற்றைய லீக் ஆட்டத்தில், முன்னாள் சாம்பியன் சென்னையின் எஃப்சி அணி, நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணியை எதிர்கொண்டது.
ஆட்டத்தின் முதல் பாதியில் பந்தை அதிகம் பாஸ் செய்து விளையாடியதால் சென்னை அணிக்கு கோல் அடிக்க பல வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், சென்னை அணியின் முன்கள வீரர்களால் அதனை சரியாக கோலாக மாற்ற முடியாமல் போனது.
இதையடுத்து இரண்டாம் பாதியில் இரு அணிகளும் அட்டாக்கிங் முறையில் விளையாட தொடங்கியதால் ஆட்டம் அனல் பறக்கும் விதமாக அமைந்தது. இருப்பினும் ஆட்டத்தின் 57ஆவது நிமிடத்தில் சென்னை வீரர் ரஃபேல் க்ரீவெலாரோ 60 யார்ட் தூரத்திலிருந்து அடித்த ஷாட், நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணியின் கோல்கீப்பர் சவுத்ரியை கடந்து கோலுக்குச் சென்றது.
இதைத்தொடர்ந்து, 60ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் ஸ்ட்ரைக்கர் நெர்ஜஸ் வாஸ்கிஸ் மிரட்டலான கோல் அடித்தார். அதன்பின் நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணி கோல் அடிக்க முயற்சித்தாலும் சென்னை அணியின் கோல்கீப்பரை கடந்து கோல் அடிக்க முடியாமல் போனது.
இறுதியில், சென்னையின் எஃப்சி அணி 2-0 என்ற கோல் கணக்கில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தியது. நடப்பு சீசனில் சென்னை அணி வெல்லும் நான்காவது போட்டி இதுவாகும்.
இதன்மூலம், புள்ளிப்பட்டியலில் சென்னையின் எஃப்சி அணி 12 ஆட்டங்களில் நான்கு வெற்றி, மூன்று டிரா, ஐந்து தோல்வி என 15 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்திலிருந்து ஆறாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. மறுமுனையில், நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணி 11 போட்டிகளில் இரண்டு வெற்றி, ஐந்து டிரா, நான்கு தோல்வி என 11 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.
இதையும் படிங்க:ஒரே சீசனில் ரூ.6,000 கோடி வருவாய் - பார்சிலோனா சாதனை!