இந்தியாவில் மூலை முடுக்கெங்கும் கிரிக்கெட் போட்டிகள் விளையாடப்பட்டாலும், கேளரா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் கால்பந்து போட்டிகள் விளையாடப்படுவதைதான் பார்க்க முடியும். ஏனெனில் அந்த அளவிற்கு கேரளா, மேற்குவங்கத்தில் கிரிக்கெட்டை விட கால்பந்து போட்டிக்கே ரசிகர்கள் முன்னிரிமை அளிப்பார்கள்.
அதிலும், கேரளாவில் கால்பந்து போட்டிக்கு எப்போதும் தனி மவுஸ் உண்டு என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். கால்பந்து போட்டி மீது அவர்கள் காட்டும் ஆர்வம் அனைவரையும் வியக்க வைக்கும் வகையிலேயே இருக்கும்.
அந்த வகையில், மலப்புரம் அரசுப்பள்ளி மாணவர்களின் ஃப்ரீகிக் கோல்தான் சமூக வலைதளங்கள் பக்கம் எங்கு பார்த்தாலும் தென்பட்டுவருகிறது. இந்த மெர்சல் ஃப்ரீகிக் கோலுக்கு சொந்தக்காரர்கள் எல்.பி அரசுப்பள்ளியில் பயிலும் நான்காம் வகுப்பு மாணவர்களான பிரத்யூஷ், லுக்மனுல் ஹக்கிம், அஸ்லாஹ், மற்றும் அடில்தான்.
கால்பந்து போட்டியில் ஃப்ரீகிக் அடிக்கும் போது, எதிரணி கோல்கீப்பரை குழம்ப வைக்கும் வகையில் பிரத்யூஷ், லுக்மனுல் ஹக்கிம், அஸ்லாஹ் ஆகியோர் பந்தை அடிக்க வந்தாறு அடிக்காமல் விட்டுச்செல்ல அதை அடில் நேர்த்தியாக அடித்து கோலாக்கினார். இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் பெக்ஹாம் அடிக்கும் ஃப்ரீகிக் கோல் போல இந்த சிறுவர்களின் ஃப்ரீகிக் இருந்தது.