ஐரோப்பாவில் தலைசிறந்த கால்பந்து கிளப் அணிகளில் ஒன்றாக திகழும் பார்சிலோனா அணியின் ஆட்டத்திறன் கடந்த சில மாதங்களாக மந்தமாக இருப்பதாக ரசிகர்கள் விமர்சனம் செய்துவந்தனர். பார்சிலோனா அணியின் பயிற்சியாளர் எர்னஸ்டோ வால்வர்டேவின் (Ernesto Valverde) வியூகங்கள்தான் அதற்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்பட்டது.
2017இல் இவர் வருகைக்குப் பிறகு பார்சிலோனா அணி அட்டாக்கிங் முறையை கைவிட்டு டிஃபெண்டிங் ஆட்டத்தில்தான் கவனம் செலுத்தியது. இதனால் வெற்றிபெற வேண்டிய போட்டிகளிலும் அந்த அணி தோல்விகளைத் தழுவியது. கடந்த ஆண்டு சாம்பியன்ஸ் லீக் தொடரின் அரையிறுதிப் போட்டியில் பார்சிலோனா அணி லிவர்பூல் அணியிடம் தோல்வியடைந்தது அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக கூறப்பட்டது.
முதல் அரையிறுதிப் போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்த பார்சிலோனா அணி, இரண்டாம் அரையிறுதிப் போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து, தொடரிலிருந்து வெளியேறியது. இதனால், பார்சிலோனா அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து வால்வர்டேவை நீக்க வேண்டும் என ரசிகர்கள் #SackValverde என்ற ஹேஸ்டேக்கை டிரெண்ட் செய்தனர். ஆனாலும், வால்வர்டேவிற்கு பார்சிலோனா வீரர்கள் துணையாக இருந்துவந்தனர்.
இந்த நிலையில், சவுதி அரேபியாவில் கடந்த சில நாள்களுக்கு முன் நடைபெற்ற ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் பார்சிலோனா அணி 2-3 என்ற கோல் கணக்கில் அத்லெடிக்கோ மாட்ரிடிடம் தோல்வி அடைந்தது. இதனால், பார்சிலோனா அணியின் பயிற்சியாளர் பதிவியிலிருந்து வால்வர்டே நீக்கப்படுவதாக அந்த அணி வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும் அவருக்குப் பதிலாக ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கியூகே செசியன் (QuiQue Setien) பார்சிலோனா அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பதவிக்காலம் ஜூன் 2022ஆம் ஆண்டு வரை ஒப்பந்தமாகியுள்ளது. இரண்டரை ஆண்டுகளாக எர்னஸ்டோ வால்வர்டேவின் பயிற்சியின்கீழ் பார்சிலோனா அணி இரண்டு லா லிகா, ஒரு கோபா டெல்ரே, ஒரு ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை என மொத்தம் நான்கு கோப்பையை வென்றது.
நடப்பு லா லிகா கால்பந்து தொடரின் முதல் பாதி நிறைவடைந்ததில் பார்சிலோனா அணி இதுவரை விளையாடிய 19 போட்டிகளில் 12 வெற்றி, நான்கு டிரா, மூன்று தோல்வி என 40 புள்ளிகளை மட்டுமே எடுத்து பூஜ்ஜியம் கோல் கணக்கில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ரியல் மாட்ரிட் அணியும் 40 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் பார்சிலோனா அணி லா லிகா தொடரின் முதல் பாதியில் 40 புள்ளிகளை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மெஸ்ஸியின் முதல் மேஜிக்!