திஸ்பூர்:அர்ஜென்டினா கால்பந்துஜாம்பவான் டியாகோ மாரடோனாவுக்கு சொந்தமான விலைமதிப்புள்ள கைக்கடிகாரம் ஒன்று திருடப்பட்டது. அந்த கைக்டிகாரம் துபாயில் திருடப்பட்டது என்றும் திருடியவர் இந்தியாவுக்கு தப்பிச்சென்றதாக துபாய் காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, துபாய் காவல்துறையின் தனிப்படை இந்தியா வந்து, குற்றவாளியை தேடும் பணியில் ஈடுபட்டது. திருடியவர் அசாமில் பதுங்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்து, தனிப்படை அங்கு விரைந்தது. இந்நிலையில், சிவசாகர் பகுதியில் மாரடோனாவின் வாட்சை திருடியவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
துபாய் - அஸ்ஸாம்
திருடியவர் வாசித் ஹுசைன் என அடையாளம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவரிடமிருந்து ஹுப்லாட் கைக்கடிகாரம் கைப்பற்றப்பட்டது.
இதுகுறித்து, அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது ட்விட்டர் பதிவில்," அசாம் காவல்துறை, துபாய் காவல்துறையுடன் இணைந்து மறைந்த கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனாவிடம் இருந்து திருடப்பட்ட விலை உயர்ந்த ஹுப்லாட் கைக்கடிகாரம் கைப்பற்றப்பட்டது. வாசித் ஹுசைன் என்பவர் கைதுசெய்யப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் துபாயில் காவலாளியாக பணியாற்றினார் எனவும், அங்கு மரோடோனாவின் கைக்கடிகாரத்தை திருடிவிட்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் அசாமில் வந்து தலைமறைவாகியுள்ளார் எனவும் தகவல்கள் கூறப்படுகின்றன. மராடோனா கடந்தாண்டு நவம்பர் 25ஆம் தேதி மறைந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை தற்கொலை