ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (நவ.24) நடைபெற்ற ஐந்தாவது லீக் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணி - ஜம்ஷெட்பூர் எஃப்சி அணியை எதிர்கொண்டது.
மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கிய இப்போட்டியின் முதல் நிமிடத்திலேயே சென்னை அணியின் அனிருத் தாபா கோலடித்து, எதிரணி வீரர்களை திக்குமுக்காடச் செய்தார்.
அவரைத் தொடர்ந்து ஆட்டத்தின் 27ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய சென்னை அணியின் எஸ்மால் கோன்சால்வ்ஸ் (Esmael goncalves) கோலடித்து அசத்தினர்.
இதற்கு பதிலடி தரும் வகையில் ஜம்ஷெட்பூர் அணியின் வால்ஸ்கீஸ் ஆட்டத்தின் 37ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார். இதன் மூலம் முதல் பாதிநேர ஆட்ட முடிவில் சென்னையின் எஃப்சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் சென்னை அணியினர் டிஃபென்ஸ் ஆட்டத்தைக் கையிலெடுத்தனர். இதனால் இறுதிவரை போராடிய ஜம்ஷெட்பூர் அணியால் கோலடித்து ஆட்டத்தை சமன் செய்ய முடியவில்லை.
இறுதியில் ஆட்டநேர முடிவில் சென்னையின் எஃப்சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜம்ஷெட்பூர் எஃப்சி அணியை வீழ்த்தி, ஐஎஸ்எல் தொடரின் ஏழாவது சீசனை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க:பத்தாண்டுகளில் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கு விராட் கோலி, அஸ்வின் பெயர் பரிந்துரை!