இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கால்பந்து வீரர் கொல்கத்தாவைச் சேர்ந்த நிகில் நந்தி. இவர் 1956ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் நான்காம் இடத்திற்கு முன்னேறி இந்திய கால்பந்து அணியில் இடம்பிடித்திருந்தார். மேலும் இவர் விளையாடிய காலம் இந்திய கால்பந்து அணியின் பொற்காலம் என்றும் அழைக்கப்படுகிறது.
முன்னதாக 1948ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி சார்பாக நிகில் நந்தியின் சகோதரர்கள் சந்தோஷ், அனில் ஆகியோர் பங்கேற்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றதும் அதுவே முதல் முறை.
பின்னர் கால்பந்து விளையாட்டிலிருந்து ஓய்வுபெற்ற நந்தி, இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராகவும், புளூ டைகர்ஸ் அணியின் பயிற்சியாளராகவும் செயல்பட்டுவந்தார்.
இந்நிலையில் 88 வயதான நிகில் நந்தி, கடந்த செப்டம்பர் மாதம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதன்பின் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய அவர், சிறுநீரகப் பிரச்சினைகளால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார்.
பின்னர் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குத் திரும்பிய நிகில், தனது வீட்டிலேயே மருத்துவச் சிகிச்சையைப் பெற்றுவந்தார். இந்நிலையில் நேற்று (டிச. 24) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இத்தகவலை இந்திய கால்பந்து கூட்டமைப்பும் உறுதிசெய்தது.
இது குறித்து இந்திய கால்பந்து அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “ஒலிம்பியன் நிகில் நந்தியின் மறைவுக்கு எங்களுடைய ஆழ்ந்த இரங்கல்கள்” என்று பதிவிட்டுள்ளது. இவரது இறப்புச் செய்தியறிந்த பல்வேறு பிரபலங்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக தங்களது இரங்கல்களைத் தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க:பாக்ஸிங் டே டெஸ்ட்: இமாலய இலக்கை நிர்ணயித்த நியூ., - தடுமாறும் பாகிஸ்தான்!