அகமதாபாத்: ஒருநாள் உலகக் கோப்பை தொடர் கடந்த 19ஆம் தேதி முடிவடைந்த நிலையில், இன்று (நவம்பர்.23) ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்கியுள்ளது. இத்தொடரில் யுஸ்வேந்திர சாஹல் இடம் பெறாதது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஆசிய கோப்பை, ஒருநாள் உலகக் கோப்பை தொடர் என தொடர்ந்து நிராகரித்து வருவது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் இப்படி தொடர்ச்சியாக இந்திய அணியில் வாய்ப்பானது மறுக்கப்படுவது அவரது கரியரை முடிவுக்கு கொண்டு வரலாம் என ரசிகர்கள் தங்களது வருத்தத்தை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், லெக் ஸ்பின்னரான யுஸ்வேந்திர சாஹல் விஜய் ஹசாரே டிராபி தொடரில் உத்தரகாண்ட் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்களை எடுத்து அசத்தியுள்ளார். லிஸ்ட் ஏ கிரிக்கெட் தொடரில் ஒன்றான விஜய் ஹசாரே டிராபி இன்று தொடங்கியது. 38 அணிகள் பங்கேற்றுள்ளன. தலா 8 அணிகள் கொண்ட 3 பிரிவுகள் மற்றும் தலா 7 அணிகள் கொண்ட 2 பிரிவுகள் என மொத்தம் 5 பிரிவுகளாக ரவுண்ட ராபின் சுற்றில் மோதி வருகின்றன.