சென்னை: இந்திய அணி இந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேறி, கடைசி நேரத்தில் கோட்டை விட்டது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு வருத்தமே. இருப்பினும், இந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்கு நிறைய இளம் சொத்துக்கள் கிடைத்துள்ளது.
இளம் வீரர்களின் வருகை: யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் போன்றவர்கள் தங்களது திறமைகளை அபாரமாக வெளிப்படுத்தினர். குறிப்பாக, ரிங்கு சிங்கின் வாழ்க்கையையே 2023ஆம் ஆண்டு புரட்டி போட்டது என்று சொல்லலாம். 2023 ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில், கொல்கத்தா அணிக்கு கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவையாக இருந்தது.
முதல் பந்தை பேட்டிங் அனுபவம் இல்லாத உமேஷ் யாதவ்தான் சந்தித்தார். இருப்பினும், எப்படியோ ஒரு ரன் எடுத்தார். 5 பந்துகளில் 28 ரன்கள் எடுக்க வேண்டும், இவர் எங்கே அடிக்கப் போகிறார் என அனைவரும் நினைத்த நேரத்தில், அதனை நிகழ்த்தி கொல்கத்தா அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார், ரிங்கு சிங். அந்த தொடர் முழுக்க ஐந்தாம் வரிசைக்கு மேல் களம் இறங்கிய ரிங்கு சிங், 16 போட்டிகளில் 474 ரன்கள் எடுத்து அசத்தினார்.
அதன்பின், நேரடியாக இந்திய டி20 அணியில் இடம் பிடித்தார். இந்திய அணியிலும் ஒரு சில போட்டிகளைத் தவிர்த்து, மற்ற போட்டிகளில் அணிக்குத் தேவையான ரன்களை எடுத்து கொடுத்து, அணியின் வெற்றிக்கு பங்காற்றினார். அடுத்ததாக இந்திய ஒருநாள் அணியில் அறிமுகமான அவர், சிறப்பாக செயல்பட்டு வருகிறார். 2024 ஜூன் மாதம் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் தேர்வாவதற்கு, தற்போது அவர் கடும் போட்டியாளராக மாறியுள்ளார்.
இதைப் போன்று யாஷஸ்வி ஜெய்ஸ்வால் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணத்தில் தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதம் விளாசி அசத்தினார். மேலும் ஆவேஷ் கான், ரவி பிஸ்னோய், முகேஷ் குமார் போன்ற பந்து வீச்சாளர்களும் அசத்தி வருகின்றனர். இப்படி இந்திய அணியில் ஏராளமான இளம் வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். ஐபிஎல் தொடர் மூலம் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு தேர்வானதன் மூலம், இந்திய அணியின் எதிர்காலத்தை பிரகாசமாக்கியுள்ளனர்.
அதிக ரன்கள் விளாசிய சுப்மன் கில்:இந்திய அணியின் தொடக்க வீரரான சுப்மன் கில்லுக்கு, இந்த ஆண்டு ஒரு சிறப்பான ஆண்டாகவே மாறியுள்ளது. அவர் இந்த ஆண்டில் அதிக ரன்கள் விளாசிய வீரர் பட்டியலில் முதல் இடம் வகித்துள்ளார். 50 இன்னிங்ஸ் ஆடிய இவர் 1 இரட்டை சதம், 7 சதங்கள், 10 அரைசதங்கள் உள்பட மொத்தம் 2,126 ரன்கள் குவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, மற்றொரு இந்திய வீரராக 3வது இடத்தில் விராட் கோலி உள்ளார். அவர் 34 இன்னிங்ஸில் 8 சதங்கள், 9 அரைசதங்கள் உள்பட மொத்தம் 1,934 ரன்களை எடுத்து அசத்தியுள்ளார்.