ஹைதராபாத்: ஐசிசி நடத்திய 13வது உலகக் கோப்பை கடந்த மாதம் 19ஆம் தேதி நிறைவடைந்தது. இத்தொடரை ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது. ரசிகர்கள் அதிகம் வருகை தந்ததாக இருக்கட்டும், வணிக ரீதியாகட்டும் அனைத்திலுமே வெற்றி பெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடராக இந்த 13வது உலகக் கோப்பை தொடர் அமைந்தது.
இருப்பினும், இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையை இந்திய அணி இறுதிப் போட்டி வரை சென்று தவற விட்டது கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் மனதை உடைத்தெறிந்தது. இது ஒரு பக்கம் இருந்தாலும், இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு ஆடுகளமே காரணம் எனப் பலரும் விமர்சனம் செய்தனர்.
அதேபோல் இந்திய தங்களுக்குச் சாதகமாக பிட்ச் அமைத்ததே கடைசியில் அவர்களுக்கு ஆபத்தாக அமைந்தது எனவும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதி கொண்ட அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தின் பிட்ச் சராசரியாக உள்ளது என ஐசிசி மேட்ச் ரெஃப்ரியும் முன்னாள் ஜிம்பாப்வே பேட்ஸ்மேன் ஆன ஆண்டி பைக்ராஃப்ட் தெரிவித்துள்ளார்.