சென்னை :13வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நாட்டின் 10 நகரங்களில் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இந்நிலையில், இன்று (அக் .13) சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் 11வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். லிட்டன் தாஸ் மற்றும் டன்சிட் ஹசன் ஆகியோர் வங்கதேச அணியின் இன்னிங்சை தொடங்கினர்.
ரன் கணக்கை தொடங்கும் முன்னரே வங்கதேசம் அணி விக்கெட் கணக்கை தொடங்கியது. டிரெண்ட் பவுல்ட் வீசிய பந்தில் மேட் ஹென்ரியிடன் கேட்ச் கொடுத்து லிட்டன் தாஸ் டக் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் டன்சிட் ஹசன் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து வங்காளதேச அணியின் தொடக்க விக்கெட்டுகள் வீழ்ந்ததால் அந்த அணிக்கு நெருக்கடி உருவானது.
நியூசிலாந்து வீரர்களின் நேர்த்தியான பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் வங்கதேச வீரர்கள் விழிபிதுங்கினர். மிடல் ஆர்டர் பேட்ஸ்மேன் மெஹிதி ஹசன் மிராஸ் தன் பங்குக்கு 30 ரன்னும், அவரைத் தொடர்ந்து நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ 7 ரன்னும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து விக்கெட் அணிவகுப்பு நடத்தினர்.
60 ரன்களுக்கு உள்ளேயே வங்கதேச அணியின் டாப் ஆர்டர் வரிசை காலியானது. இந்நிலையில், கைகோர்த்த கேப்டன் ஷகிப் அல் ஹசன் (40 ரன்), விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹூம் (66 ரன்) ஜோடி தொடர்ந்து விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டது. நிதான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்த இருவரும் ஒரு கட்டத்தில் ஆட்டமிழக்க, அடுத்தடுத்து களம் கண்ட வீரர்கள் சேர்ப்ப ரன்களில் வெளியேறினர்.
மஹ்முதுல்லாஹ் இறுதி வரை நின்று ரன்களை சேர்த்து, அணியின் ரன்கள் உயர்வதற்கு உதவினார். 50 ஓவர்கல் முடிவில் வங்கதேசம் அணி 9 விக்கெட்கள் இழப்பிற்கு 245 ரன்களை சேர்த்தது. நியூசிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக லாக்கி பெர்குசன் 3 விக்கெட்டும், மாட் ஹென்றி மற்றும் போல்ட் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது நியூசிலாந்து அணி. தொடக்க ஆட்டக்காரர்களாக ரச்சின் ரவீந்திரா மற்றும் டெவோன் கான்வே களம் கண்டனர். தொடக்கமே ரச்சினை வீழ்த்தி வங்கதேச அணியினர் அதிர்ச்சி அளித்தனர். ஆனால் அதன் பின் வந்த கேன் வில்லியம்சன் - டெவோன் கான்வேவுடன் கைக்கோர்த்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
விக்கெட் இலக்காமல் பொருமையாக விளையாடிய இந்த ஜோடி அணியின் ஸ்கோர் 92 ரன்களாக இருந்த நிலையில் பிரிந்தது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கேன் வில்லியம்சன் அரைசதம் அடித்தார். மறுபுறம் டேரில் மிட்செல் அதிரடி ஆட்டத்தில் ஈடுப்பட்டு அணிக்கு ரன்களை உயர்த்தினார். 78 ரன்கள் எடுத்த கேன் வில்லையம்சன் ரிடையர்ட் ஹட் செய்து வெளியேறினார். இறுதியில் நியூசிலாந்து அணி 42.5 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். டேரில் மிட்செல் 89 ரன்களுடனும், க்ளென் பிலிப்ஸ் 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். வங்கதேசம் சார்பில் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் மற்றும் முஸ்தாபிசுர் ரஹ்மான் தலா 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தினர்.
இதையும் படிங்க :New Zealand Vs Bangladesh : நியூசிலாந்து - வங்கதேசம் யாருக்கு வெற்றி? சென்னை மெட்ரோ ரயில் முக்கிய அறிவிப்பு!