போபால்: 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல்முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. வீராங்கனைகள் சௌமியா திவாரி, திரிஷா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்த நிலையில், போபாலைச் சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனை சௌமியா திவாரியின் குடும்பத்தினரிடம் ஈடிவி பாரத் பேட்டி கண்டது. அப்போது, போட்செஃப்ஸ்ட்ரூமில் வெற்றிக் கொண்டாட்டத்தில் இருந்த தங்களது மகள் செளமியாவுக்கு அவரது பெற்றோர் வீடியோ கால் செய்தனர்.
வீடியோ கால் மூலம் ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பேசிய செளமியா, "இறுதி ஆட்டத்தில் எங்களுக்கு அழுத்தம் இருந்தபோதும், எங்களது கேம் பிளான் காரணமாக சிறப்பாக செயல்பட முடிந்தது. யு19 பெண்கள் அணிக்கு ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றி" என்று கூறினார்.
இதுகுறித்து சௌமியாவின் தாயார் பாரதி கூறுகையில், "இது என் மகளின் கனவு மட்டுமல்ல என்னுடைய கனவும்தான். தற்போது எங்களது கனவு நனவாகிவிட்டது. எனது மகளை நினைத்து பெருமைப்படுகிறேன். அவளது கடின உழைப்புதான் இந்த வெற்றிக்குக் காரணம். அவள் நம்பிக்கையோடு இருந்தாள், உலகக்கோப்பையை வென்று வருவேன் என்று உறுதி அளித்துவிட்டு சென்றாள்" என்றார்.
சௌமியாவின் தந்தை மணீஷ் திவாரி கூறும்போது, "அணிக்கு வெற்றியை தேடித்தந்ததில் என் மகளுக்கு குறிப்பிடத்தக்க பங்கு உள்ளது. என் மகளை எண்ணி எவ்வளவு பெருமைப்படுகிறேன் என்பதை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகள் இல்லை. உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்பது அவளுடைய கனவு. தற்போது அவள் வெற்றியடைந்ததை எண்ணி நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியடைகிறோம்" என்றார்.
இதையும் படிங்க:19 வயதுக்குட்பட்டோருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் - இந்திய மகளிர் அணி சாம்பியன்!