தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

TNPL 2023: சாய் சுதர்சன் அதிரடி: சென்னையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கோவை கிங்ஸ்!!

தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் லைகா கோவை கிங்ஸ் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸை வீழ்த்தியது

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 20, 2023, 1:53 PM IST

திண்டுக்கல்: தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023 சீஸனில் டி.என்.பி.எல் தொடரின் 200வது போட்டி திண்டுக்கல், நத்தம் என்.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மைதானத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணியும், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்று லைகா கோவை கிங்ஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஆல் ரவுண்டர் ஹரீஷ் குமார் வெறும் 20 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். லைகா கோவை கிங்ஸின் பந்துவீச்சை பொறுத்தவரை வி யுதீஷ்வரன் அதிகபட்சமாக 3 விக்கெட்களை எடுத்து சிறப்பாக செயல்பட்டார்.

லைகா கோவை கிங்ஸ் இந்த சீஸனில் 2வது வெற்றியைப் பதிவு செய்ய அந்த அணிக்கு 20 ஓவர்களில் 127 ரன்கள் தேவைப்பட்டது. லைகா கோவை கிங்ஸ் அணியின் தாமரை கண்ணனுக்குப் பதிலாக இம்பாக்ட் வீரராக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பி சச்சின் 14 ரன்களில் ராஹில் ஷாவின் சுழலில் தனது விக்கெட்டை இழக்க, அதன் பின்னர் 2வது விக்கெட்டிற்கு ஜெ சுரேஷ் குமார் மற்றும் சாய் சுதர்ஷன் ஜோடி சேர இருவரும் அற்புதமாக விளையாடி 65 ரன்களை சேர்த்தனர்.

ஓப்பனர் ஜெ சுரேஷ்குமார் தொடர்ந்து லைகா கோவை கிங்ஸிற்கு நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்து இந்தப் போட்டியிலும் மிகச் சிறப்பாக விளையாடி 34 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். அவருக்குப் பக்கபலமாக விளையாடி வந்த ஐபிஎல் சூப்பர் ஸ்டார் சாய் சுதர்ஷன் இந்த சீஸனில் தொடர்ச்சியாக தனது 3வது அரைசதத்தைப் பதிவு செய்ததோடு ஆரஞ்சு கேப்பை (orange cap) தொடர்ந்து தன் வசப்படுத்தியுள்ளார்.

தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் தொடர்ச்சியாக தனது 5வது அரைசதத்தை அடித்த சாய் சுதர்ஷன்(64*) இறுதி வரை ஆட்டமிழக்காமல் தனது அணியின் வெற்றியை உறுதி செய்ததோடு இந்த சீஸனில் தனது முத்திரையை இன்னும் அழுத்தமாக பதித்தார். மேலும் சென்ற ஆண்டு இறுதிப் போட்டியில் இவ்விரு அணிகளின் மோதலும் வெற்றி தோல்வியின்றி டையில் முடிந்த நிலையில், இன்றைய வெற்றியின் மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸிற்கு எதிரான தங்களின் ஆதிக்கத்தை லைகா கோவை கிங்ஸ் நிரூபித்தது.

இறுதியில் 21 பந்துகள் மீதமுள்ள நிலையில் லைகா கோவை கிங்ஸ் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸை வீழ்த்தி இந்த சீஸனில் தங்களின் 2வது வெற்றியைப் பதிவு செய்தது. மறுபுறம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் இந்த சீஸனில் தங்களின் முதல் தோல்வியைப் பெற்றது.

இதையும் படிங்க: Ashes2023: விறுவிறுப்பான கட்டத்தில் முதல் டெஸ்ட், ஆஸ்திரேலியா வெற்றி பெற கடைசி நாளில் 174 ரன்கள் தேவை!

ABOUT THE AUTHOR

...view details