திண்டுக்கல்:டிஎன்பிஎல் தொடரில் நேற்று (ஜூன் 30) இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்ற 7ஆவது லீக் போட்டியில், நெல்லை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணியை வீழ்த்தியிருந்தது.
இந்நிலையில், சீசெம் மதுரை பாந்தர்ஸ், லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதிய 8ஆவது லீக் போட்டி இரவு 7.15 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற மதுரை அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, கோவை அணி 20 ஓவர்களில் 151 ரன்களை எடுத்தது. 152 ரன்கள் என்ற சுமாரான இலக்குடன் களமிறங்கிய மதுரை அணி, கடைசி ஓவர் வரை சென்று 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அந்த அணியில் தொடக்க வீரர் ஆதித்யா, ஒன்-டவுணில் களமறிங்கிய பாலசந்தர் அனிருத் ஆகியோர் டக்-அவுட்டான நிலையில், கேப்டன் என்எஸ் சதுர்வேத் 74 (45), அருண் கார்த்திக் 38 (33) ரன்கள் எடுத்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர். இருப்பினும், கடைசி கட்ட ஓவர்களில் இவர்கள் ஆட்டமிழந்த நிலையில், ஜெகதீசன் கௌசிக் 27 (21) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து மதுரை அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.