தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

TNPL 2022: திண்டுக்கல்லை திண்டாடவைத்த திருச்சி - அஜய் கிருஷ்ணா அசத்தல்! - ஆதித்யா கணேஷ்

டிஎன்பிஎல் தொடரில் திண்டுக்கல் அணிக்கு எதிரான போட்டியில், திருச்சி அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. திருச்சி அணியின் வேகப்பந்துவீச்சாளர் அஜய் கிருஷ்ணா தனது முதல் போட்டியிலேயே 16 டாட் பந்துகளையும், 2 விக்கெட்டுகளையும் எடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

TNPL Ajay Krishna, அஜய் கிருஷ்ணா
TNPL Ajay Krishna

By

Published : Jun 25, 2022, 8:15 AM IST

Updated : Jun 25, 2022, 8:25 AM IST

திருநெல்வேலி:தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் டிஎன்பிஎல் டி20 தொடரின் ஆறாவது சீசன் திருநெல்வேலி சங்கர் நகர் இந்தியா சிமெண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று முன்தினம் (ஜூன் 23) தொடங்கியது. இந்நிலையில், நேற்று (ஜூன் 24) நடைபெற்ற 2ஆவது லீக் போட்டியில், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி - திண்டுக்கல் டிராகன்ஸ் அணியுடன் மோதியது.

2000 விக்கெட்: முதலில் டாஸ் வென்ற திருச்சி அணி கேப்டன் ரஹில் ஷா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி, முதலில் பேட்டிங்கை தொடங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, சரவணகுமார் வீசிய முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தது. ஏஜி பிரதிப் 1 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், சரவணகுமார் கைப்பற்றிய இந்த விக்கெட், டிஎன்பிஎல் தொடரின் 2000ஆவது விக்கெட்டாக பதிவானது.

திணறிய திண்டுக்கல்:தொடர்ந்து, திண்டுக்கல் அணி கேப்டன் ஹரி நிஷாந்த் அதிரடியாக விளையாடி வந்த நிலையில், அஜய் கிருஷ்ணாவின் வேகத்தில் வீழ்ந்தார். அவரை தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியபோது, லஷ்மிநாராயணன் விக்னேஷ் மட்டும் 32 (20) ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார். 20 ஓவர்கள் முடிவில் திருச்சி அணி 8 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை எடுத்தது. திருச்சி பந்துவீச்சில் கேப்டன் ரஹில் ஷா, அஜய் கிருஷ்ணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

ஒரே ஓவரில் 2 விக்கெட்: இதனைத் தொடர்ந்து, திருச்சி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அமித் ஷாதிக், முரளி விஜய் ஆகியோர் களமிறங்கினர். மனோஜ் குமார் வீசிய ஐந்தாவது ஓவரின் நான்காவது பந்தில் அமித் ஷாதிக் 20 (15) ரன்களுக்கும், கடைசி பந்தில் முரளி விஜய் 8 (13) ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

3ஆவது விக்கெட் பார்ட்னர்ஷிப்:அடுத்து வந்த நிதிஷ் ராஜகோபால், ஆதித்யா கணேஷ் நிலைத்து நின்று, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் இணைந்து 84 பந்துகளில் 114 ரன்கள் அணிக்கு பெற்றுக்கொடுக்க, திருச்சி அணி 19 ஓவர்களில் இலக்கை கடந்தது. இதன்மூலம், 8 விக்கெட் வித்தியாசத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி, திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தியது.

அசத்திய அஜய்: ரூபி திருச்சி வாரியர்ஸ் பந்துவீச்சு தரப்பில் 4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி வெறும் 9 ரன்களை மட்டும் கொடுத்த அஜய் கிருஷ்ணா தனது முதல் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருதை வென்றார். அவர், நேற்றைய போட்டியில் ஒரு மெய்டன் ஓவர் உள்பட மொத்தம் 16 டாட் பந்துகளை வீசியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:இந்தியாவில் நடைபெறவுள்ள ஜூனியர் மகளிர் உலகக்கோப்பை கால்பந்து - கடினமான பிரிவில் இந்தியா!

Last Updated : Jun 25, 2022, 8:25 AM IST

ABOUT THE AUTHOR

...view details