இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 2வது டி -20 போட்டி ஒடிசா மாநிலம் , கட்டாக்கில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் பவுமா பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய தொடக்க வீரர்கள் ரிதுராஜ் கேக்வாத் , இஷான் கிஷன் களமிறங்கினர்.
முதல் ஓவரிலேயே ரிதுராக் கேக்வாத் ஆட்டமிழந்தாலும் , இஷான் கிஷன் தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் பவுண்டரிகள் அடித்து இந்தியாவின் ரன் ரேட்டை 7க்கும் அதிகமாக வைத்திருந்தார். அவர் ஆட்டமிழந்ததும் இந்தியாவின் ரன் வேகம் குறைந்தது. ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழ , ஸ்ரேயாஸ் ஐயர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இறுதிக்கட்டத்தில் தினேஷ் கார்த்திக் 2 பவுண்டரி , 2 சிக்ஸர் விரட்ட இந்தியா 140 ரன்களை கடந்தது. 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் களமிறங்கினர்.
புவனேஷ்வர் குமாரின் அபார பந்து வீச்சால் தென் ஆப்பிரிக்கா பவர் பிளேயில் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஆனால் கிளாஸன் , பவுமா நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த தென் ஆப்பிரிக்கா சரிவில் இருந்து மீண்டது. 12 ஓவர்களுக்கு பிறகு கிளாஸன் அதிரடியாக ஆடினார். அவருக்கு டேவிட் மில்லர் ஒத்துழைக்க தென் ஆப்பிரிக்கா வெற்றி பாதையை நோக்கி நகர்ந்தது.
இறுதியில் 10 பந்துகள் மீதம் வைத்து , தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட் வித்தியாசத்தில் 149 ரன்கள் இலக்கை துரத்தியது. அதிரடியாக ஆடிய கிளாஸன் 7 பவுண்டரி , 5 சிக்ஸருடன் 81 ரன்கள் குவித்தார். இந்திய தரப்பில் புவனேஷ்வர் 4 ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தியும் , அது அணியின் வெற்றிக்கு உதவவில்லை; சுழற்பந்து வீச்சாளர்களான சாஹல் 4 ஓவர்களில் 49 ரன்களும், அக்ஷர் பட்டேல் ஒரு ஓவரில் 19 ரன்களையும் வாரி வழங்கினர்.
81 ரன்கள் விளாசிய கிளாஸன் ஆட்ட நாயகன் விருதினை பெற்றார். இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் தென் ஆப்பிரிக்கா 2க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அடுத்த ஆட்டம் நாளை விஷாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.