சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) தொடரின் ஐந்தாவது சீசன் கடந்த ஜூலை 19ஆம் தேதி தொடங்கியது. இத்தொடரின் 16ஆவது லீக் ஆட்டத்தில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும், லைகா கோவை கிங்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற கோவை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, பேட்டிங் ஆடிய திருப்பூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. அதில் அதிகபட்சமாக தினேஷ் 39(30), பிரான்சிஸ் ரோகின்ஸ் 38(27), கேப்டன் முகமது 33(25) ரன்களை சேர்த்தனர்.
கோவை அணியில் அபிஷேக் தன்வர், திவாகர், முகிலேஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், அஜித் ராம் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
சுதர்சனின் நான்காவது அரைசதம்
அடுத்து களமிறங்கிய கோவை அணிக்கு, கங்கா ஸ்ரீதர் ராஜூ 30(17) எடுத்து சிறந்த தொடக்கத்தை அளித்தார். இந்த தொடரில் மூன்று அரைசதங்களை பதிவு செய்துள்ள சாய் சுதர்சன் இந்தப்போட்டியிலும் சோப்பிக்க தவறவில்லை.
மறுமுனையில் அஸ்வின் வெங்கட்ராமன் 24(24) ரன்களிலும், கேப்டன் ஷாருக்கான் 15(13) ரன்களிலும் வெளியேற, சாய் சுதர்சன் 51(36) ரன்களில் ரன் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.
கேப்டனின் கட்டுக்கோப்பு
இந்நிலையில் கடைசி ஓவரை கேப்டன் முகமது வீச வந்தார். அந்த ஓவரில் ஆறு ரன்கள் எடுத்தால் கோவை வெற்றி என்ற நிலையில், முகிலேஷ், அஜித் ராம் ஆகியோர் களத்தில் இருந்தனர்.
முதல் மூன்று பந்துகளில் 2 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த முகமது நான்காவது பந்தில் முகிலேஷின் விக்கெட்டை கைப்பற்றினார். ஐந்தாவது பந்தில் அஜித் ராம் 1 ரன் எடுக்க, கடைசி பந்தில் வெற்றிக்கு 3 ரன்களும், டிராவுக்கு 2 ரன்களும் தேவைப்பட்டது. ஆனால், கடைசி பந்தைச் சந்தித்த செல்வ குமரன் ராஜ்குமாரிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டைப் பறிகொடுக்க திருப்பூர் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடைசி ஓவரில் 2 விக்கெட்டுகள் உள்பட மொத்தம் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய திருப்பூர் தமிழன்ஸ் அணி கேப்டன் முகமது ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையும் படிங்க: TNPL 2021: மதுரை பாந்தர்ஸ் vs நெல்லை கிங்ஸ்; மதுரை நிதானம்