சென்னை:தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) தொடரின் ஐந்தாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் நடைபெற்ற 28 லீக் போட்டிகளில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி, சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், லைகா கோவை கிங்ஸ் ஆகிய அணிகள் ப்ளோ-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றனர்.
முதல் குவாலிஃபயரில், திருச்சி அணி சென்னையை வீழ்த்தி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது. எலிமினேட்டரில் திண்டுக்கல் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது குவாலிஃபயரில் சென்னை அணி திண்டுக்கல்லை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
மூன்றாவது கோப்பையை நோக்கி சென்னை
2017, 2019 என இரண்டு முறை சாம்பியனான சென்னை அணி, இம்முறையும் கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. அந்த அணியின் பேட்டிங்கில் கேப்டன் கௌசிக் காந்தி, ஜெகதீசன், ராஜகோபால் சதீஷ் ஆகியோர் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளனர். பந்துவீச்சில் சாய் கிஷாரும் மிரட்டி வருகிறார்.
திமிறும் திருச்சி...
திருச்சி அணி இந்த தொடர் முழுவதும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்துள்ளது. டேபிள் டாப்பராக இருந்து, முதல் குவாலிஃபயரிலேயே வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது. திருச்சி அணியில் பெரும் இளைஞர் பட்டாளமே தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்துள்ளது.
மதிவண்ணன், சரவணன் குமார் என பலமான பந்துவீச்சாளர்களை திருச்சி அணியில் இருந்தாலும், பேட்டிங் வரிசையும் திடமாகவே உள்ளது. இந்த தொடரில், இரு அணிகளும் இரண்டு முறை மோதியுள்ள நிலையில் இரண்டிலும் திருச்சி அணியே வெற்றி பெற்றுள்ளது.