துபாய் : 2021 டி20 உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி நியூசிலாந்தை பேட்டிங் செய்ய பணித்தது.
இந்நிலையில் முதலில் ஆடிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 172 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் கேன் வில்லியம்சன் 85 ரன்கள் குவித்தார்.
ஆஸ்திரேலிய தரப்பில் ஹசில்வுட் சிறப்பாக பந்துவீசி 16 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 26 ரன்கள் விட்டுக்கொடுத்த ஸம்பா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் உலக கோப்பையை வெல்லலாம் என்ற உத்வேகத்துடன் ஆஸ்திரேலியா பேட்டிங்கை தொடர்ந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் களம் இறங்கினர்.
அதிரடி ஆட்டம் காட்டிய டேவிட் வார்னர் 38 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். மறுமுனையில் ஆரோன் பிஞ்ச் 7 பந்துகளில் 5 ரன்கள் எடுத்து நடையை கட்டினார். அடுத்து களம் கண்ட மிட்செல் மார்ஸ், கிளீன் மேக்ஸ்வெல் நிலைத்து நின்று அதிரடியாக ஆடினர். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய மார்ஸ் 38 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார்.