கொல்கத்தா :13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் அதில், இந்தியா, தென் ஆபிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் நாக் அவுட் சுற்றான அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கான இரண்டாவது அணியை தேர்வு செய்யும் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (நவ. 16) நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
தென் ஆப்பிரிக்க அணியின் இன்னிங்சை கேப்டன் டெம்பா பவுமா, குயின்டன் டி காக் ஆகியோர் தொடங்கினர். தொடக்கமே தென் ஆப்பிரிக்க அணிக்கு அதிர்ச்சிகரமாக அமைந்தது. கேப்டன் டெம்பா பவுமா, மிட்செல் ஸ்டார்க் பந்தில் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் குயின்டன் டி காக் 3 ரன்னில் ஆட்டமிழந்தார்.
தொடக்க ஜோடி இருவரும் சொற்ப ரன்களில் வெளியேறியதால் தென் ஆப்பிரிக்காவின் ரன் வேகத்தை ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்கள் எளிதில் கட்டுப்படுத்தினர். ஆஸ்திரேலிய வீரர்களின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தென் ஆப்பிரிக்க வீரர்கள் கடுமையாக திணறினர். எய்டன் மார்க்ரம் 10 ரன், அவரைத் தொடர்ந்து ராஸ்ஸி வேன் டர் துஸ்சென் 6 ரன் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.