செஞ்சூரியன்: தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டி20 மற்றும் ஒருநாள் தொடர்களும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடி வருகிறது. இந்த நிலையில், டி20 மற்றும் ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் நேற்று (டிச.26) தொடங்கியது.
முதல் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி, பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா களம் இறங்கினர். அதன்பின், அடுத்தடுத்து இந்திய அணியின் வீரர்கள் களம் இறங்க, இந்திய அணி 59 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது, மார்க்கோ ஜான்சன் 1 விக்கெட்டும், நந்த்ரே பர்கர் 2 விக்கெட்டும் எடுத்திருந்தனர்.
இந்நிலையில் இன்று (டிச.27) 2வது நாளாக ஆட்டம் தொடங்கியது. கே.எல்.ராகுல் - சிராஜ் ஜோடி பேட்டிங் செய்த நிலையில், சிராஜ் 5 ரன்களில் அவுட் ஆனார். பின், பிரசித் கிருஷ்ணாவுடன் கே.எல்.ராகுல் பேட்டிங் ஆடினார். 137 பந்துகளில் 14 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 101 ரன்கள் கே.எல்.ராகுல் எடுத்தார். இதன் மூலம் இந்திய அணி 67.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்கள் எடுத்தது.
தென் ஆப்ரிக்கா அணி: தென் ஆப்பிரிக்கா அணியின் முதல் இன்னிங்ஸில் தொடக்க வீரர்களாக டீன் எல்கர் - ஐடன் மார்க்ரம் ஜோடி களமிறங்கியது. இதில், 17 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து மார்க்ரம் வெளியேறினார். அதன்பின், டீன் எல்கர்- டோனி டி ஜோர்ஜி ஜோடி விளையாடியது.
இதில், டீன் எல்கர் தனது ஆட்டத்தைச் சிறப்பாக வெளிப்படுத்தினார். தென் ஆப்பிரிக்கா அணி 16 ஓவர்கள் முடிவில், ஒரு விக்கெட் இழப்பிற்கு 49 ரன்கள் எடுத்தது. அப்போது, டீன் எல்கர் தனது அரை சதத்தைப் பதிவு செய்தார். டோனி டி ஜோர்ஜி பும்ரா பந்தில் ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து, 28.6வது ஓவரில் 28 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து களத்தில் இருந்த டீன் எல்கருடன், கீகன் பீட்டர்சன் களம் கண்டார். தென் ஆப்பிரிக்கா அணி 30 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்தது. இந்திய பந்து வீச்சாளரை எதிர்கொள்ள முடியாமல் திணறிய கீகன் பீட்டர்சன், 7 பந்துகளில் 2 ரன்கள் எடுத்து போல்டானார்.